செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இன்று மேலும் முக்கியமான கண்டுபிடிப்புகள் பதிவாகியுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வின் 17ஆம் நாளான இன்று வெள்ளிக்கிழமை மொத்தம் 13 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இருந்து 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் – இதில் மூன்று சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள் உள்ளடங்கலாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இதன் மூலம் இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 296 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டநிலையில், 290 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வு பணிகளின்போது, ஒரு எலும்புக்கூட்டுடன் இணைந்த நிலையில் தகரத்தாலான ஒரு பொருளும் மீட்கப்பட்டு, அது முக்கியமான சான்றுப் பொருளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை சனிக்கிழமை அகழ்வு பணிகள் இடம்பெறாது எனவும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அகழ்வு பணிகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
