சுரேஷ் சாலேக்கு மனிதாபிமானமற்ற சித்திரவதைகளாம் – கவலைப்படுகிறார் கம்மன்பில

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேக்கு மனிதாபிமானமற்ற கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்று பிவிதுரு ஹெல உறுமயவின் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய தடயவியல் மற்றும் சட்ட மருத்துவ நிறுவகத்தின் பதிவாளர் மருத்துவர்ஜெயசீலன் ஜெயகாந்தனின் மருத்துவ அறிக்கையை ஆதாரமாகக் காட்டி அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சாலே தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் எட்டு சிசிடிவி கமெராக்கள் இருந்தன. அவர் மீதான தாக்குதல்கள் மற்றும் நிர்வாணப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யென்றால் அந்த காட்சிகளை வெளியிடுமாறும் கூறினார்.

அந்த மருத்துவ அறிக்கையின்படி, சாலே கைது செய்யப்பட்ட சுமார் 7 நாட்களுக்குப் பிறகு அவரின் உள்ளாடைகளைத் தவிர மற்ற அனைத்து ஆடைகளையும் கழற்றுமாறு பணிக்கப்பட்டு, கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் குனிய வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் ஏனைய மூன்று கைதிகளுக்கு முன்னால் அதிகாரியால் அவர் உடல் ரீதியான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் சுமார் 40 நாட்களாக வெறும் தரையில் உறங்க வைக்கப்பட்டுள்ளார். தற்போது ஓர் அங்குல தடிமனுள்ள மெத்தை வழங்கப்பட்டிருந்தாலும், அவரது முகத்திற்கு நேரே 24 மணி நேரமும் பிரகாசமான மின்விளக்கு எரியவிடப்படுவதால் அவர் கடும் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்.

சாலேயின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவருக்குப் போதுமான குடிதண்ணீர், காய்கறிகள், பழங்கள், இறைச்சி அல்லது மீன் வழங்கப்படாததால் அவர் கடுமையான புரதச்சத்து மற்றும் விட்டமின் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

சாலேயின் உடல்நிலையைச் சீராக்க மருத்துவர்கள் விரிவான உணவுப் பட்டியலைப் பரிந்துரைத்த போதிலும், அவருக்கு மிகக் குறைந்த அளவிலான உணவே வழங்கப்படுகிறது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், வாரத்துக்கு நான்கு நாட்கள் 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற மருத்துவப் பரிந்துரையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தனது பொய்களை மறைக்க, சலேயைத் தற்கொலைக்குத் தூண்டும் நோக்கில் இவ்வாறான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கம்மன்பில சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சாலே உயிரிழக்கும் பட்சத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் அவருடன் புதைக்கப்பட்டுவிடும் என அரசாங்கம் எண்ணுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles