நாட்டில் தற்போது நிலவும் கடுமையான டொலர் தட்டுப்பாடு மற்றும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, நாடு மீண்டும் பெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏற்றுமதியாளர்கள் தங்களது டொலர் வருமானத்தை ரூபாயாக மாற்றுவதற்கான கால அவகாசத்தை 90 நாட்களில் இருந்து 30 நாட்களாக அரசாங்கம் திடீரெனக் குறைத்துள்ளது.
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் எழுதிய ஜனாதிபதி, பொருளாதாரத்தை தளர்த்துவதற்காக 90 நாட்கள் வரம்பு நீக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், மூன்று வாரங்கள் கூட நிறைவடையாத நிலையில், ஜனாதிபதி தற்போது ‘ரிவர்ஸ் கியரில்’ வந்து இதனை 30 நாட்களாகக் குறைத்துள்ளார். நாட்டில் டொலர் தட்டுப்பாடு இருப்பதனாலேயே அரசாங்கம் இந்த ‘கட்டாய மாற்றத்தை’ மேற்கொண்டுள்ளது.
சந்தையில் டொலர்கள் இல்லாத காரணத்தால், அத்தியாவசியப் பொருட்களுக்கு மாத்திரமே கடன் கடிதங்களை திறக்குமாறு மத்திய வங்கி, வணிக வங்கிகளுக்கு அதிகாரபூர்வமற்ற முறையில் அறிவுறுத்தியுள்ளது.
சில வங்கிகள் ஏற்கனவே இதனை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன. சந்தை மீதான நம்பிக்கை உடைந்துள்ளதையே இது காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
