சங்கீத்சன் பிணை கோரிக்கையை ஆட்சேபித்தது அரச தரப்பு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாடகர் சங்கீத்சனுக்கு பிணை கோரி அவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்தச்சமயம் அரசு தரப்பில் நீதிமன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துத்தான் பிணை பெற முடியும் என்று வாதாடினார். அத்துடன், அது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

ஆயினும், பிந்திய சட்டத் திருத்தத்துக்கு அமைய விதிவிலக்கான சமயங்களில் மேல் நீதிமன்றத்திலும் அந்தப் பிணை அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என்று சங்கீத்சனின் சட்டத்தரணி கேசவன் சயந்தன் வாதிட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கை வரும் 23ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இந்தப் பிணை கோரும் மனு இன்று வியாழக்கிழமை யாழ். மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிணைக்கு விண்ணப்பித்த சட்டத்தரணி கேசவன் சயந்தன் பின்வரும் விடயங்களை மன்றுக்குச் சுட்டிக்காட்டினார்.

‘தவறான விடயத்துக்காகத் தவறான முறையில் சங்கீத்சன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார். அந்தவகையில் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு, நீதிப் பிறழ்வு இடம் பெற்றுள்ளது. சங்கீத்சனின் மூல வழக்குத் தொடர்பான ‘பி” அறிக்கையில் உள்ள தவறுகள் காரணமாக அவரின் விளக்கமறியல் முற்றிலும் தவறானது. அதனால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் நீதிப் பிறழ்வு நீடிக்கின்றது.

இந்த மன்றில் பொலிஸார் தரப்பில் முன்னிலையாக வேண்டியவரும் சட்டமா அதிபரின் பிரதிநிதியுமான அரச சட்டத்தரணி நேரில் பிரசன்னமாகி இருக்கின்ற காரணத்தால், நீதிமன்ற கட்டளைச் சேவகர் ஊடாக உடனடியாக சட்டமா அதிபருக்கும் பொலிஸாருக்கும் அறிவித்தலை அனுப்பி, வழக்கு விசாரணையை நாளையே நடத்த வேண்டும்’ – என்று கோரினார்.

இரு தரப்பு வாதங்களையும் செவி மடுத்த நீதிபதி வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதிக்குத் திகதியிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles