தாய்லாந்தின் பாங்காக் நகரில் அமைந்துள்ள பிரபல எரவான் வழிபாட்டுத் தலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2015 ஓகஸ்ட் 17 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். 120இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சீன சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த வழிபாட்டுத் தலத்தில் நான்கு தலைகளைக் கொண்ட பிரம்மன் உருவம் வழிபடப்படுகிறது.
சம்பவத்தையடுத்து சீனாவின் உய்குர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த யுசுபு மியரைலி மற்றும் பிலால் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
காணொலி பதிவுகள், கைரேகைகள் மற்றும் பிற சான்றுகளின் அடிப்படையில் இருவரும் குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் என வழக்குத் தொடரப்பட்டது.
இந்த நிலையில், தெற்கு பாங்கொக் குற்றவியல் நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.
அவர்களுக்கு எதிராக வலுவான சான்றுகள் காணப்படுகின்றன. குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கப்போதுமான ஆதாரங்களை அவர்கள் முன்வைக்கத் தவறியுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பில் 17 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும், மூவர் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
