கனடாவின் ஒன்ராறியோ மாகாணம் மேப்லெட்டன் நகரில் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என ஒன்ராறியோ மாகாண பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியளவில் கிச்சனர் நகருக்கு வடக்கே உள்ள கோனெஸ்டோகோ ஏரிக்கு அருகில் வெல்லிங்டன் றோட் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காரும் வானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான வானில் 10 பேரும் காரில் ஒருவரும் இருந்துள்ளனர். வானில் இருந்த 4, 6, 8, 10 மற்றும் 12 வயதுடைய ஐந்து சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரும் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் ஆவர். விபத்துக்குள்ளான வானில் சிறுவர்களின் பெற்றோர், பாட்டி மற்றும் 15 மாதக் குழந்தை உட்பட 10 பேர் பயணித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த நான்கு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்களின் தாய் ஹாமில்டன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையிலும், தந்தை லிஸ்டோவல் மருத்துவமனையில் சீரான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை செலுத்தியவரின் கால்கள் உடைந்த நிலையில், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எல்மிரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
