யாழ்.நகரை அண்டிய பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை அர்ச்சுனா இராமநாதனின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது உருவப்படத்தில் ”பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராஜபக்ச ஈனப் பிறவி” என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள், சபை நாகரீகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் செயல்பட்டு வருகிறார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அர்ச்சுனா இராமநாதன் அண்மையில் அன்றும், இன்றும், என்றும் மஹிந்தவே ஜனாதிபதி என்று கூறி சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தார்.
யாழ்ப்பாண மக்களால் சுயேச்சையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அர்ச்சுனா தற்போது மஹிந்த அணிக்கு சார்பாக பேசும் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இது தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே அவரது உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு தனது காரில் வந்த அர்ச்சுனா எம்.பி, பதாகையை கிழித்தெடுத்து தனது காரில் எடுத்து சென்றுள்ளார்.
