லக்னோ பயிற்சி மைய கட்டட தீ விபத்தில் சிக்கி மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பயிற்சி மைய கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லக்னோ அலிகஞ்ச் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டடம் ஒன்றில் மாணவர்களுக்கான அனிமேஷன் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 15 முதல் 17 வயதுக்கு உட்பட்ட பல மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். இந்தக் கட்டடத்தில் செல்ல பிராணிகளுக்கான கடை உள்ளிட்ட பிற கடைகளும் இதில் இயங்கி வந்துள்ளன.

இந்நிலையில், இந்த கட்டடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து வேகமாக கட்டடம் முழுவதற்கும் பரவியது. பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள் பலர் இந்த தீ விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களில் சிலர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். மேலும், பலர் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீ அணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக்கும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, கட்டடம் முழுவதும் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரஜேஷ் பதக், “இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்து கேஜிஎம்சி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிப்பதே எங்கள் முன்னுரிமை. தீ விபத்து எப்படி, ஏன் ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் விசாரணை அறிக்கைக்குப் பிறகே தெரிய வரும்.

விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles