கட்டாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியர்கள் என தெரியவருகின்றது.
ராஸ் லப்பான் தொழிற்துறை மண்டலத்தில் அமைந்துள்ள நகரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) சுத்திகரிப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து ஏற்பட்டதாக கட்டார் உள்நாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வெடிவிபத்தின் காரணமாக அந்த நகரத்தின் வானமே ஆரஞ்சு நிறமாக மாறியது.
இந்த விபத்து நாட்டின் எரிவாயு ஏற்றுமதியைப் பாதிக்காது என்று கட்டார் நாட்டின் எரிசக்தி அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி தெரிவித்துள்ளார்.
மேலும், இது ஒரு விபத்து மட்டுமே, இதில் எந்தவிதமான சதிவேலைகளோ அல்லது வெளிநபர்களின் தாக்குதல்களோ இல்லை என்றும் அவர் கூடினார்.
ராஸ் லப்பான் துறைமுகமானது உலகின் மிகப்பெரிய செயற்கை துறைமுகமாகும். மேலும் இது உலகின் மிகப்பெரிய எல்என்ஜி (LNG) ஏற்றுமதி வசதியைக் கொண்டுள்ளது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இத்துறைமுகம் ஈரான் நாட்டின் தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
