சிங்கப்பூரில் தேவாலயம் ஒன்றிலிருந்து இதற்கு முன்பு இலவசமாக பைபிள்களை எடுத்துச் சென்ற ஒருவர், மீண்டும் ஒரு பைபிளை எடுக்க முற்பட்டவேளை தடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து ஆவேசமாக நடந்துகொண்டார்.
தேவாலயத்திலிருந்து வெளியேறியபோது அவர், அங்கு வழிபாட்டிற்கு வந்த ஐந்து பேரைத் அறைந்தார். இதில் பெண் ஒருவருக்கு மூக்கிலிருந்து ரத்தம் கசிந்தது.
பிரின்செப் வீதியில் உள்ள சிங்கப்பூர் லைஃப் சர்ச் தேவாலயத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இந்நிலையில், மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான 33 வயது வீ சூன் மிங்கிற்கு திங்கட்கிழமை (ஜூன் 22) ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்னதாக, வேண்டுமென்றே காயம் விளைவித்த இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். இதர நான்கு குற்றச்சாட்டுகளும் அவருக்குத் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டன.
தேவாலயத்திற்கு வந்தவர்களை வீ அறைந்ததற்கு சமய ரீதியான எந்தவொரு தூண்டுதலோ பின்னணியோ இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
