படிப்பில் நாட்டம் குறைந்ததால் தாயாரால் கண்டிக்கப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவன் கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
ஷா ஆலாம், செக்ஷன் 16, பாங்சாபூரி ரிம்பா குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன், பாடங்களில் தேர்ச்சி விகிதம் குறைந்ததன் காரணமாக அவனது தாயார் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேறினான்.
இதுகுறித்து அவனது பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் பொலிஸாரால் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில், புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு துரித உணவு உணவகத்தின் வெளிப்பகுதியில் அச்சிறுவனை அவனது பெற்றோரே கண்டுபிடித்துள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், கடந்த ஒரு வார காலமாக புக்கிட் பிந்தாங் பகுதியிலேயே சுற்றித் திரிந்ததாகவும், இரவு நேரங்களில் அங்குள்ள துரித உணவு உணவகத்தில் உறங்கியதாகவும் ஷா ஆலாம் மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சிறுவன் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
