மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனி தெஹ்ரானுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள தான் விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ் வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே கையெழுத்திடப்பட்ட இந்தத் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தமானது, நிரந்தர உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்காக 60 நாட்கள் அவகாசத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
எனினும், கடந்த வாரம் கட்டாரில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தைகள் எந்தவித முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில் துருக்கியின் தலைநகர் அங்காராவில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டுக்கு முன்னதாக ஊடகவியலாளர்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப்,
“என்னைப்பொறுத்தவரை, அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்றுதான் நான் நினைக்கிறேன். இனி அவர்களுடன் எந்தப் பேச்சும் இல்லை.
அவர்கள் துரோகிகள் , அவர்கள் மனநலமற்றவர்கள். அவர்களை வழிநடத்துபவர்களும் அவ்வாறானவர்களே. அவர்களுடன் கையாள்வது வெறும் நேர விரயம் என்றே நான் கருதுகிறேன்” எனத் தெரிவித்தார்.
நேட்டோவின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேயுடன் இணைந்து ட்ரம்ப் இந்தக் கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
