ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது புதிய கட்டத் தாக்குதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஹோர்முஸ் நீரிணை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த வணிகக் கப்பல் ஒன்று, தனது கண்காணிப்பு அமைப்புகளை அணைத்துவிட்டு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கடல்வழிப் பாதையிலிருந்து விலகிச் சென்றதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. பலமுறை எச்சரித்தும் கேட்காததால், எச்சரிக்கை நடவடிக்கையாகக் ஏவுகணையை ஏவி அக்கப்பலைத் தடுத்து நிறுத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் தகவல்படி, ஈரானின் இந்த “வெளிப்படையான தாக்குதலால்” சைப்ரஸ் கப்பலின் இயந்திர அறை கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இதனால் கப்பல் மேற்கொண்டு நகர முடியாமல் கடலில் தத்தளித்து வருகிறது. மேலும், இத்தாக்குதலில் கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

வணிகக் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வாரத்தில் ஈரானுக்கு எதிரான தனது மூன்றாவது சுற்று வான்வழித் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளதாக CENTCOM உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விடுத்துள்ள எச்சரிக்கையில் –

“வணிகக் கப்பல்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஈரான் மீண்டும் தவறான முடிவை எடுத்து வம்புக்கு இழுத்துள்ளது. அதற்கான கடுமையான விளைவுகளை அது இப்போது சந்தித்து வருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உலக அளவில் மசகு எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கிய பாதையாகத் திகழும் ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த முற்றுகையை மீறி அமெரிக்கா ஏதேனும் “ஆக்கிரமிப்பு” நடவடிக்கைகளில் ஈடுபட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ஈரான் அச்சுறுத்தியுள்ளது.

சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தால், மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் தற்பொழுது கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles