கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின்போது இன்று (16) கடுமையான வாக்குவாதமும் பெரும் குழப்பநிலையும் ஏற்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
மேலும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் போது கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.
அப்போது, விவசாயத் துறை சார்ந்த கலந்துரையாடலின் போது, கிளிநொச்சி திருவையாறு பகுதியில் முன்னெடுக்கப்படும் விவசாயச் செய்கைக்கான தேசிய வேலைத்திட்டத்தில் பெரும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாகத் தனது விமர்சனக் கருத்துக்களை முன்வைத்த அர்ச்சுனா இராமநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததால் கூட்டத்தில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது.
இதன் காரணமாக, அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறியதுடன், பொலிஸாரின் பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்தை விட்டும் வெளியேறினர். இதனால் கூட்டம் பாதியிலேயே நிறைவடைந்தது.
அதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்படும் நிலை உருவானபோது, அங்கிருந்த பொலிஸார் தலையிட்டு இருவரையும் தடுத்து நிறுத்தினர்.
