நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டீ அனாவு நகருக்கு அருகே 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, சுற்றுலா மையமான ஃபியர்ட்லாண்டிற்கான நுழைவாயிலாக விளங்கும் டீ அனாவுவிலிருந்து சுமார் 40 கி.மீ (24.85 மைல்கள்) வடக்கே அமைந்திருந்தது.

அமெரிக்க புவியியல் ஆய்வு திணைக்களம் (USGS) மற்றும் ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி திணைக்களம் (GFZ) ஆகிய இரண்டும், இந்த நிலநடுக்கம் 50 கி.மீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் 5.9 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாகக் கணித்துள்ளன.

பூமிக்கு அடியில் சுமார் 51 முதல் 53 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்த நிலையில், அச்சமடைந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வீடுகள், ஹோட்டல்களை விட்டு வெளியேறி வீதிகளிலும் திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை நிலநடுக்கத்தை அடுத்து நியூசிலாந்தின் தெற்குத் தீவு கடலோரப் பகுதிகளில் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக உயரமான இடங்கள் அல்லது சுனாமி மீட்பு மண்டலங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை ‘கடல்சார் அறிவுறுத்தலாகக்’ குறைக்கப்பட்டாலும், கடலோரப் பகுதிகளில் ஆபத்தான அலைகள் மற்றும் வலுவான நீரோட்டம் நீடிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. அவசரக்காலத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 24ஆம் திகதி வெனிசுலாவில் அடுத்தடுத்து ரிச்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான நிலநடுக்கங்களின் பாதிப்பிலிருந்து உலகம் இன்னும் மீளாத நிலையில், தற்போது நியூசிலாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles