மலேசியாவில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

மலேசியாவின் கெடா, கூலிமில் உள்ள தாமான் எகோ ரிம்பா சுங்கை செடிம் பொழுதுபோக்குத் தளத்தில் நேற்று (ஜூலை 17) மதியம் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களின் குடும்பச் சிறுமியின் 7ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மகிழ்ச்சியுடன் சுற்றுலா சென்ற இடத்தில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் நூர் அதிகா அப்துல்லா (28), அவரது 3 வயது உறவினர் சிறுவன் முகமட் ஆரிஸ் டேனியல் முகமட் ராட்ஸி மற்றும் 12 வயது சிறுவன் முகமட் உஸைர் அஹ்மதி ஹுசைன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நூர் அதிகாவின் தம்பி நூர் ஆரிஃப் சுக்ரி (26) இச்சம்பவம் குறித்துக் கூறுகையில், தனது அக்காவின் மூத்த மகளான நூர் அதியா சோஃபியாவின் 7ஆவது பிறந்தநாளைக் கொண்டாடத் தங்களின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் அங்குச் சென்றிருந்ததாகக் குறிப்பிட்டார்.

“நாங்கள் மதிய உணவை முடித்த சில நிமிடங்களிலேயே, அக்கா திடீரென காட்டாற்று வெள்ளம் வருவதைப் பார்த்துவிட்டு எங்களை எச்சரித்தார். அடுத்த சில வினாடிகளிலேயே நீரோட்டம் மிகக் கடுமையாக மாறியது. அப்போது எங்களில் 8 பேர் தண்ணீரில் இருந்தோம்,” என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், நூர் ஆரிஃப் தனது 12 மற்றும் 5 வயது உடன்பிறப்புகளை மட்டுமே தன்பக்கம் இழுக்க முடிந்தது. ஆனால், அடுத்த கணமே பலத்த நீரோட்டம் அவர்களைப் பிரித்தது. பொதுமக்கள் உதவியுடன் அவரது இரு உடன்பிறப்புகளும் மீட்கப்பட்டனர். ஆரிஃப் ஒரு மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்பினார். முதலில் தனது அக்கா கரைக்குச் சென்று தப்பிவிட்டதாக அவர் நினைத்த நிலையில், பின்னர் அவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் உயிரிழந்தது தெரியவந்தது.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குனுங் பிந்தாங் மலை அடிவாரத்தில் உள்ள ‘ட்ரீ டாப் வாக்’ பகுதியில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு நீந்திக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

முதலில் 12 வயது சிறுவன் முகம்மது உஸைரின் உடல், அவர்கள் சுற்றுலா இருந்த இடத்திலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அடுத்த 50 மீட்டர் தொலைவில் 3 வயது சிறுவன் மற்றும் 28 வயது பெண்ணின் உடல்களும் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட மூன்று பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles