அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தொடர்பாக ஒன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான டொலர்கள் லாபம் ஈட்டப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் நாளிதழான வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளதாவது –
அமெரிக்க – ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் 6 லட்சம் டொலர் அளவுக்கு ஒன்லைன் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க நிர்வாகத்தின் இரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி பொலிமார்க்கெட் மற்றும் கால்ஷி போன்ற ஒன்லைன் வர்த்தக மற்றும் சூதாட்டத் தளங்களில் பந்தயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் போர் தொடங்கியதில் இருந்தே இது போன்ற பல்வேறு ஆன்லைன் பந்தயங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதமே வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், நிதி ஆதாயங்களுக்காகப் பொதுவெளியில் இல்லாத ரகசியத் தகவல்களைப் பகிர்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்படுமா என்ற தலைப்பில் பந்தயம் நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் முதற்கட்ட போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, பிளாக்செயின் ஆராய்ச்சி நிறுவனமான பபிள்மப்ஸ் நடத்திய ஆய்வில், பொலிமார்க்கெட் தளத்தில் உள்ள மூன்று அநாமதேயக் கணக்குகள், ஏப்ரல் போர் நிறுத்த அறிவிப்பைச் சரியாகக் கணித்து பந்தயம் கட்டி, 6,00,000 டொலருக்கும் அதிகமாக (இந்திய மதிப்பில் சுமார் 5.77 கோடி ரூபாய்க்கும் மேல்) லாபம் ஈட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே இரகசியத் தகவல் கசிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அதிபர் ட்ரம்பின் டெலிபிராம்ப்டர் ஒபரேட்டரான கப்ரியல் பெரெஸ் மீதான விசாரணை தொடங்கியுள்ளது. அதிபர் நிகழ்த்தவிருக்கும் உரைகளை முன்கூட்டியே அணுகி, அந்தத் தகவல்களைப் பந்தயம் கட்டுவதற்காக அவர் கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒன்லைன் சூதாட்டங்கள் மூலம் பெரெஸ் 1,00,000 டொலருக்கும் அதிகமாகச் சம்பாதித்தமை குறித்து, அமெரிக்காவின் கொமாடிட்டி ஃபியூச்சர்ஸ் டிரேடிங் கமிஷன் விசாரணை நடத்தி வருவதை வெள்ளை மாளிகையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சூதாட்ட விவகாரம் வெள்ளை மாளிகை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், பல உயர் அதிகாரிகளை தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர காரணமாகி உள்ளது. இவ்வாறு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
