இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பற்றிக்கை, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரெலோவின் உப தலைவரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் சந்தத்துப் பேச்சு நடத்தினர்.
இந்தச் சந்திப்பின்போது அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் சட்டமூலம்’ ஆகியவற்றால் சிறுபான்மைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளவுள்ள ஆபத்துகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ரெலோ தலைவர்களால் பிரிட்டன் தூதுவரிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:-
அடக்குமுறைச் சட்டங்கள்
வட – கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு எதிர்ப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான நீதிப் போராட்டங்களை ஒடுக்கவும், தனிநபர்களை இலக்குவைத்துத் தன்னிச்சையாகக் கைது செய்யவும் இந்தப் புதிய சட்டமூலங்கள் வழிவகுக்கும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலீடாக மேலும் ஆபத்தான சட்டங்களை அரசு கொண்டுவருவது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாகும்.
மாகாண சபைத் தேர்தல் தாமதமும் காணி அபகரிப்பும்
மாகாண சபைத் தேர்தலை அரசு இழுத்தடிப்பதனால் வடக்கில் காணிகள் விடுவிக்கப்படாமலும், கிழக்கில் மாதவனை – மயிலத்தமடு பாரம்பரிய மேய்ச்சற்தரைகளில் சட்டவிரோதக் குடியேற்றங்கள் ஊடாகவும் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்க் கட்சிகளின் கூட்டிணைவு
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் 5 கட்சிகள், தமிழ்த் தேசியப் பேரவை மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 தமிழ் பேசும் கட்சிகள் பொது விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படுவதுடன், புலம்பெயர் அமைப்புகளின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கும் ஆதரவளித்து வருகின்றமை தெளிவுபடுத்தப்பட்டது.
பிரிட்டன் தூதுவரின் உறுதி
ரெலோ பிரதிநிதிகளின் விளக்கங்களுக்குப் பதிலளித்த பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பற்றிக்,
“இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைகளில்கூடத் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலங்கள் கடந்த காலங்களில் பல்வேறு பெயர்களில் சமர்ப்பிக்கப்பட்ட வேளைகளிலும் நாங்கள் அவற்றை மிகக் கவனமாக அவதானித்து வந்துள்ளோம். அதேபோன்று, இந்த முறையும் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலங்கள் குறித்து நாங்கள் மிகுந்த அக்கறையுடனும் அவதானத்துடனும் இருந்து வருகின்றோம்.” – என்று குறிப்பிட்டார்.
