சிங்கப்பூரின் கடவுச்சீட்டு மீண்டும் உலகின் ஆகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக திகழ்கிறது.
சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 192 நாடுகள்/பகுதிகளுக்கு விஸா இல்லாமல் பயணம் செய்யலாம் அல்லது சென்றடைந்த பிறகு விஸா பெற்றுக்கொள்ளலாம் (visa-on-arrival).
கடந்த ஜனவரி மாதம் இதற்கு முன்பு ஹென்லி குறியீட்டுப் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து ஐக்கிய அரபு சிற்றரசுகள்தான் பட்டியலில் ஆக அதிக இடங்கள் மாறியுள்ளது. அது மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
ஜப்பான், தென்கொரியா ஆகியவற்றுடன் சேர்ந்து ஐக்கிய அரபு சிற்றரசுகள் இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. அந்த மூன்று நாடுகளின் கடவுச்சீட்டுகளைக் கொண்டு 188 நாடுகள்/பகுதிகளுக்கு எளிதில் பயணம் மேற்கொள்ள முடியும்.
பட்டியலில் சுவீடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 11 ஐரோப்பிய நாடுகள் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன.
பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்துக் குடியரசு, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின் ஆகியவை நான்காவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளன.
