“மோசமாகப் பேசிவிட்டேன்” – பிரதமரிடம் வீடியோவில் மன்னிப்பு கோரிய சிறுமி

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற சி.ஜே.பி. போராட்டத்தின்போது, ​​பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான முழக்கங்களை எழுப்பியதற்காக 15 வயது சிறுமி ஒருவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஜூலை 23 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக 15 வயது சிறுமி ஒருவர் மன்னிப்புக் கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி வெளியிட்ட வீடியோவில், “ நான் நண்பர்களுடன் கன்னாட் பிளேஸ் பகுதியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட போது, பிரதமருக்கு எதிராக அவதூறான முழக்கங்களை எழுப்பினேன். என்னைச் சுற்றியிருந்தவர்களின் தாக்கத்தால் நானும் அவ்வாறு பேசினேன்.

எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்தது மன்னிக்க முடியாத செயல். நான் பல மோசமான வார்த்தைகளைப் பேசிவிட்டேன். இது தான் எனது முதல் மற்றும் கடைசி தவறு. நான் ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கோருகிறேன். நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னையே பார்க்க முடியவில்லை. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் தனிப்பட்ட முறையில் அவதூறாக பேசிய இளைஞர்களை தான் மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், “ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் என்னைப் பற்றியும், எனது மறைந்த தாயார் பற்றியும் மிகவும் மோசமான சொற்களைப் பயன்படுத்திப் பேசியது மனதுக்கு மிகுந்த வேதனையளித்தது.

இருப்பினும், தவறு செய்வது இளமைப் பருவத்தின் இயல்பு. அந்தத் தவறுகளிலிருந்து திருந்த அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். வழக்குகளைப் பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அலைக்கழிப்பதாலோ அல்லது சமூக அளவில் அவர்களைத் தனிமைப்படுத்துவதாலோ எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அவர்கள் வழிதவறிய குழந்தைகள், அவர்களைச் சரியான பாதைக்கு அழைத்துச் செல்வதே நமது கடமையாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, பிரதமரை அவதூறாகப் பேசியது தொடர்பாக நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது பூஜ்ஜிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்காக டெல்லி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ள சூழலில் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles