கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள், தாலிக்கொடி உள்ளிட்ட சுமார் 28 பவுண் பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, வீட்டார் மறுநாள் நடைபெறவிருந்த குடும்பக் கொண்டாட்ட நிகழ்வுக்காக இரவு நேரத்தில் தயாராகிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ஒருவர் குளியலறைக்கு சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, திறந்திருந்த கதவு வழியாக திருடன் வீட்டுக்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
மறுநாள் காலை வீட்டார் எழுந்து பார்த்தபோது, அறையில் இருந்த அலுமாரிகள் திறந்த நிலையில் காணப்பட்டதுடன், திருமண நிகழ்வுக்காக தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி உள்ளிட்ட அனைத்து தங்க நகைகளும் காணாமல் போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், மோப்ப நாய்களின் உதவியுடனும், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள வீடுகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், பல்வேறு கோணங்களில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
