ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அரசின் பாதுகாப்பு படையினர் 59 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஏவுகணை மற்றும் டடிரோன்களை ஹவுதிகள் பயன்படுத்தி உள்ளனர். ஏமன் உள்நாட்டு போரில் கடந்த நான்கு ஆண்டுகளில் இது மிக மோசமான தாக்குதல் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலில் ஏமன் கவனம் பெற்றுள்ளது. இந்த மோதலில் சவுதி அரேபியாவுக்கு ஏமன் அரசு துணை புரிந்து வருவதாக தகவல். அந்த குற்றச்சாட்டை முன்வைத்து ஏமனின் அரசு பாதுகாப்பு படை மற்றும் சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டடிரோன்களை பயன்படுத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை அன்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவில் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 4 வயது குழந்தை ஒன்றும் அடங்கும் என்று சவுதி அரேபிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் அந்நாட்டின் நஜ்ரான் மாகாணத்தின் தெற்கு பகுதியில் நடந்துள்ளது. இது ஏமன் நாட்டின் எல்லலையோர பகுதியை ஒட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஏமன் நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 30 படை வீரர்கள் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். சவுதி ஆதரவுடன் இந்த ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியளர்களுக்கு ஈரான் ஆதரவு வழங்கி வருகிறது. அமெரிக்காவுக்கு சவுதி அரேபியா ஆதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
