41 வயதான கால்பந்து நட்சத்திரமான ரொனால்டோ, மொடலான ஜோர்ஜினா ரொட்ரிகஸை (Georgina Rodríguez) நேற்று போர்த்துக்கல்லின் கஸ்காயிஸ் (Cascais) நகரில் நடைபெற்ற பதிவுத் திருமண நிகழ்வில் கரம் பிடித்தார்.
அவர்களின் ஐந்து குழந்தைகள் மட்டுமே கலந்துகொண்ட இந்நிகழ்வு, ஒரு தனியார் மற்றும் நெருக்கமான தருணமாக அமைந்திருந்தது.
தங்களின் திருமண மோதிரங்களுடன் கூடிய தம்பதியரின் கை புகைப்படத்தைப் பகிர்ந்த ரொனால்டோ, அதற்கு “C❤️G” என்று தலைப்பிட்டுள்ளார்.
கடந்த 2025 ஓகஸ்ட் 11 அன்று ஜோர்ஜினா (32) தங்களின் நிச்சயதார்த்தத்தை இன்ஸ்டாகிராமில் அறிவித்த ஒரு வருடத்திற்குப் பிறகு இந்தத் திருமணம் நடந்துள்ளது.
ரொனால்டோவின் கையின் மீது தனது கையை வைத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், அதில் தனது பெரிய, ஓவல் வடிவிலான வைர மோதிரத்தை நெருக்கமாகக் காண்பித்திருந்தார்.
அப்படத்திற்கு, “ஆம், நான் சம்மதிக்கிறேன். இந்த வாழ்விலும் எனது எல்லா வாழ்விலும்” என்று ஸ்பானிஷ் மொழியில் தலைப்பிட்டிருந்தார்.
2017ஆம் ஆண்டு குச்சி (Gucci) ஷோரூம் ஒன்றில் விற்பனை உதவியாளராக ஜோர்ஜினா பணியாற்றியபோதே ரொனால்டோ அவரை முதன்முதலில் சந்தித்தார்.
அதே ஆண்டு ஜனவரி மாதம், சூரிச்சில் நடைபெற்ற ‘தி பெஸ்ட் ஃபிஃபா கால்பந்து விருதுகள்’ (Best FIFA Football Awards) விழாவில் இருவரும் முதன்முதலாக சிவப்பு கம்பளத்தில் ஒன்றாகக் தோன்றினர்.
மே மாதத்திற்குள், ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தைப் பதிவிட்டு தங்களின் உறவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
ஜேர்ஜினாவின் 2022 நெற்ஃபிலிக்ஸ் (Netflix) தொடரான “ஐ ஆம் ஜோர்ஜினா” (I Am Georgina) நிகழ்ச்சியில், தங்களின் ஆரம்பகால காதல் நாட்களைப் பற்றி ரொனால்டோ மனம் திறந்திருந்தார்.
அதில், ஜோர்ஜினா “மிகவும் சுவாரஸ்யமான பெண், அவரது வயதை விட மிகவும் முதிர்ச்சியடைந்தவர்” என்று தான் கருதியதாகக் குறிப்பிட்ட ரொனால்டோ, ஆனால் இந்தக் காதல் இவ்வளவு காலம் நீடிக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
