ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸின் லேபர் கட்சி (Labor Party) பல தசாப்தங்களாகத் தன் வசம் வைத்திருந்த மாநில நாடாளுமன்றத் தொகுதியை, தீவிர வலதுசாரிக் கட்சியான ‘வன் நேஷன்’ (One Nation) கைப்பற்றியுள்ளது.
தேசியக் கீழவையில் தனது முதல் இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆதரவை இக்கட்சி மீண்டும் நிரூபித்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலைநகரான பெர்த்தில் தொழிற்கட்சியின் கோட்டையாக விளங்கிய சீக்ரெட் ஹாபர் (Secret Harbour) தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், உடற்பயிற்சிக் கூடத்தின் உரிமையாளரான லூக் ஹெர்டெகன் வெற்றி பெற்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை வெளியான உத்தியோகபூர்வ வாக்கு எண்ணிக்கையின்படி, மேற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கீழவையில் ‘வன் நேஷன்’ கட்சி கைப்பற்றிய முதல் தொகுதி இதுவாகும்.
செனட்டர் பாலின் ஹான்சன் (Pauline Hanson) தலைமையிலான ‘வன் நேஷன்’ கட்சி, கூட்டாட்சி பிரதிநிதிகள் சபையில் தனது முதல் தேர்தலை வென்ற ஒரு மாதத்திற்குப் பிறகு, கடந்த ஜூன் மாதத்தில் முதன்முறையாக தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில் தொழிற்கட்சியை முந்தியது.
1997 இல் தொடங்கப்பட்ட ‘வன் நேஷன்’ கட்சி, நீண்டகாலமாக அரசியல் களத்தின் ஓரத்தில் இயங்கி வந்த போதிலும், வீடமைப்புப் பற்றாக்குறை, கடுமையான வாழ்க்கைச் செலவு மற்றும் ஆஸ்திரேலியாவின் முக்கிய பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீதான மக்களின் அதிருப்தி ஆகியவற்றுக்கு மத்தியில், குடியேற்றக் கட்டுப்பாடுகள் குறித்த தனது தீவிர நிலைப்பாட்டினால் அதிக ஆதரவைப் பெற்று வருகிறது.
இந்த வெற்றி, ‘வன் நேஷன்’ கட்சி அதிகரித்து வரும் தனது ஆதரவை இடங்களாக மாற்றத் தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரதான மைய-இடது மற்றும் மைய-வலது கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலை உணர்த்துகிறது.
மேலும், இந்த ஆண்டின் இறுதியில் விக்டோரியா (Victoria) மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான எதிர்பார்ப்பையும் இது அதிகரித்துள்ளது.
கூட்டாட்சி லேபர் கட்சியின் சிரேஷ்ட அமைச்சரான டான்யா பிளிபர்செக் (Tanya Plibersek), தொலைக்காட்சி பேட்டியொன்றில் கூறுகையில், லூக் ஹெர்டெகனின் வெற்றி தங்கள் கட்சிக்கு ஒரு பாடம் என்றும், சாதாரண ஆஸ்திரேலியர்களின் சுமையைக் குறைக்க உண்மையான தீர்வுகளை வழங்கும் ஒரே கட்சி தொழிற்கட்சிதான் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த தாங்கள் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
