கிர்கிஸ்தானில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் நேற்று நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்கா, ஈரான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது. ஈரானின் நெருங்கிய வர்த்தக கூட்டாளியாக விளங்கும் இந்தியா போரை நிறுத்தவும், அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவும் இருதரப்பையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேநேரத்தில் இந்தியா ஈரானுடன் வர்த்தகம் செய்வதை கடுமையாக எதிர்த்து வரும் அமெரிக்கா இது தொடர்பாக இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.
இந்த சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் நேற்று நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது. பிப்ரவரியில் ஈரான்-அமெரிக்கா போர் தொடங்கிய பிறகு இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்தது இதுவே முதல்முறையாகும்.
இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளின் சமீபத்திய நிலை குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்ததோடு, ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கூட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
முன்னதாக ஜூன் மாதம், பிரதமர் மோடியும் பெசெஷ்கியானும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது மோதலை முடிவுக்குக் கொண்டுவர எட்டப்பட்ட புரிந்துணர்வுகளை வரவேற்ற பிரதமர் மோடி, நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தொடர்ச்சியான முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
