‘பிறப்புறுப்பு திருட்டு’ தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட பொய்யான வதந்திகளால், ஆபிரிக்காவின் பல நாடுகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 80 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக பி.பி.ஸி. செய்தி வெளியிட்டுள்ளது.
‘Genital theft’ என அழைக்கப்படும் இந்த விசித்திரமான வதந்தி, TikTok உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்கள் ஊடாக வேகமாகப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்ரோபர் முதல் 2026ஆம் ஆண்டு ஜூலை வரையான காலப்பகுதியில், குறைந்தது ஆறு ஆபிரிக்க நாடுகளில் இந்த வதந்தியை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுமக்கள் மீது கும்பல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் 80இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என பி.பி.ஸி. மற்றும் அதன் Global Disinformation Unit தெரிவித்துள்ளன.
கும்பலால் ஒருவர் இழுத்துச் செல்லப்படுவது, பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்படுவது மற்றும் கல்லால் அடித்துக் கொல்லப்படுவது போன்ற கொடூரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கோவில் கடந்த ஆண்டு இந்த வதந்தி மீண்டும் பரவத் தொடங்கியதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு முன்னரும் 2008ஆம் ஆண்டில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்ததாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பின்னர் இந்த வதந்தி புருண்டி, ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி மற்றும் கென்யா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்நிலையில், இந்த வதந்தியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மொசாம்பிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு ஆறு வார காலப்பகுதியில் மட்டும் 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என கடந்த மே மாதம் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியும் உள்ளடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் ஊடாக பரவும் தவறான தகவல்கள் எவ்வாறு உண்மையான வன்முறையாக மாறி மனித உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கின்றன என்பதற்கு இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
