சீன உளவு அமைப்புக்கு அறிக்கை அளித்த ஆஸ்திரேலிய தொழிலதிபருக்கு சிறை!

சீன உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அறிக்கைகளைத் தயாரித்து வழங்கிய குற்றத்திற்காக, சிட்னியைச் சேர்ந்த தொழிலதிபர் அலெக்சாண்டர் செர்கோவிற்கு மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கவனக்குறைவான வெளிநாட்டு தலையீட்டுக் குற்றச்சாட்டின் (reckless foreign interference) கீழ் ஆஸ்திரேலியாவில் நபர் ஒருவருக்கு தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

எனினும், ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்த மாதமே அவர் பிணையில் விடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

58 வயதான செர்கோ, ஷாங்காயில் பணியாற்றியபோது ‘கென்’ (Ken) மற்றும் ‘எவ்லின்’ (Evelyn) ஆகிய இரு நபர்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.

பணம் பெற்றுக்கொண்டு லித்தியம் சுரங்கம், ஜெர்மன் அரசாங்கத்தின் மாற்றம், பாதுகாப்பு, ‘குவாட்’ (Quad) கூட்டணி மற்றும் ‘அக்கஸ்’ (AUKUS) ஒப்பந்தம் உள்ளிட்ட தலைப்புகளில் அறிக்கைகளைத் தயாரித்து வழங்கியுள்ளார்.

அவர்கள் சீன உளவு அமைப்பான ‘மாநில பாதுகாப்பு அமைச்சகத்திற்காக’ (MSS) பணியாற்றுகிறார்கள் என்பதை அறிந்திருந்தும், தனது செயல் வெளிநாட்டு உளவு நடவடிக்கைகளுக்கு பயன்படும் என்பதை உணராமல் அவர் கவனக்குறைவாகச் செயல்பட்டுள்ளார் என அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

எனினும், பகிரங்கமாகக் கிடைக்கக்கூடிய தகவல்கள் மற்றும் போலி நேர்காணல்களைக் கொண்டே அறிக்கைகள் தயாரிக்கப்பட்டதாகவும், நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் செர்கோவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி கிரேக் ஸ்மித், மே அல்லது ஜூன் 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலப்பகுதியில் செர்கோ கவனக்குறைவாகவும் ஏமாற்றும் வகையிலும் செயல்பட்டுள்ளது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

முன்னதாக சிறையில் கழித்த 600க்கும் மேற்பட்ட நாட்களைக் கணக்கில் கொண்டு, செர்கோவிற்கு 3 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் அக்டோபர் 24, 2026 அன்று அவர் பிணையில் செல்லத் தகுதி பெறுவார் என நீதிபதி அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles