யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள சவூதி அரேபியாவிற்கு வரம்பிற்குட்பட்ட இராணுவ ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை விமானத்தில் புறப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் –
சவூதி அரேபிய போர் விமானங்களுக்கு , பிரித்தானிய அரச விமானப் படை (Royal Air Force) வான்வழி எரிபொருள் நிரப்பும் (air-to-air refuelling) உதவிகளை வழங்கும் என்று கூறினார்.
“இராணுவ உதவி கோரி சவூதி அரேபிய அரசிடமிருந்து எங்களுக்குக் கோரிக்கை வந்தது. பாதுகாப்புச் செயலர் மற்றும் வெளியுறவுச் செயலரின் ஆலோசனையின் பேரில், தற்காப்பு சார்ந்த வான்வழி எரிபொருள் நிரப்பும் கோரிக்கைக்கு நேற்று இரவு நான் ஒப்புதல் அளித்தேன்” என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் “குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்” என்றும், தொடர்ந்து மறுஆய்வு செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
யேமனின் சவுதி ஆதரவு பெற்ற அரசாங்கத்திற்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரித்தானியாவிடம் சவுதி அரேபியா உதவி கோரியிருந்தது.
பிரித்தானியாவும் சவுதி அரேபியாவும் பல தசாப்தங்களாக நெருங்கிய இராணுவக் கூட்டாளிகளாக இருந்து வருகின்றன. லண்டன், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தர்களில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரின் போது, ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து சவுதி அரேபியாவைப் பாதுகாப்பதற்காகப் பிரித்தானியா தனது ‘ஸ்கை சேபர்’ (Sky Sabre) வான் பாதுகாப்பு அமைப்பை அங்கு நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
