பலஸ்தீன குழந்தைகளுக்காக மைதானத்தில் அஞ்சலி செலுத்திய அமெரிக்க வீரர்

அமெரிக்கக் கால்பந்து லீக் (NFL) போட்டிகளின் போது விதிக்கப்படும் அபராதங்கள் மற்றும் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்படும் என்ற அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல், காசாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட பலஸ்தீனக் குழந்தைகளுக்கு அமெரிக்காவின் NFL வீரர் அஜீஸ் அல்-ஷாயிர் (Azeez Al-Shaair) மீண்டும் தனது அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.

ஹூஸ்டன் டெக்சான்ஸ் அணியின் வீரரான (Linebacker) அஜீஸ் அல்-ஷாயிர், இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட லானா (12 வயது) மற்றும் அவரது சகோதரி பானா (8 வயது) ஆகியோரின் பெயர்களைத் தனது முகத்தின் கண்ணுக்குக் கீழே ஒட்டப்படும் கறுப்புப் பட்டையில் (Eye black) எழுதி, இண்டியானாபோலிஸ் கோல்ட்ஸ் (Indianapolis Colts) அணிக்கு எதிரான போட்டியில் ஞாயிற்றுக்கிழமை களமிறங்கினார்.

போட்டிக்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, அந்தச் சகோதரிகள் குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அல்-ஷாயிர், பலஸ்தீனம் மற்றும் சூடான் நாடுகளின் கொடிகள் பொறிக்கப்பட்ட தனது கறுப்பு நிறச் காலணிகளையும் அவர்களது பெயர்கள் எழுதப்பட்ட பட்டையையும் புகைப்படமாகப் பகிர்ந்திருந்தார்.

கறுப்பின அமெரிக்க முஸ்லிம் வீரரான அல்-ஷாயிர், பாலஸ்தீன மக்களின் துயரங்கள் குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

முன்னதாக செப்ரெம்பர் 13 அன்று, காசாவில் இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 வயதுச் சிறுமி ஹிந்த் ரஜாபின் (Hind Rajab) பெயரை அவர் தனது ஆடையில் பொறித்திருந்தார்.

ஆடை விதிமுறைகளை மீறியதாக NFL நிர்வாகம் அவருக்கு 11,491 டொலர் அபராதம் விதித்தது. எனினும், பிரபல என்.பி.ஏ (NBA) கூடைப்பந்து நட்சத்திரமான கைரி இர்விங் (Kyrie Irving) அந்த அபராதத் தொகையைச் செலுத்துவதாக அறிவித்தார்.

இது குறித்துப் பேசிய அல்-ஷாயிர், “ஒரு மனித உயிரின் மதிப்பு என்ன? 11,000 டொலருக்கு ஒரு உயிரை ஒப்பிட முடியுமா? நிச்சயமாக இல்லை.

மனித உயிர்கள் விலர்மதிக்க முடியாதவை” என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளிலும் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனக் குழந்தைகளின் பெயர்களை அவர் தனது முகத்தில் பொறித்து விளையாடினார்.

அல்-ஷாயிரின் இந்தச் செயலுக்கு NFL நிர்வாகம் போட்டிகளிலிருந்து அவரை நீக்கப் போவதாக எச்சரித்ததற்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சி அரசியல்வாதி ஐசையா மார்ட்டின் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2023 ஒக்ரோபர் 7 முதல் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 21,500 பாலஸ்தீனக் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles