டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் சி.ஜே.பியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளால் இந்த மாதம் டெல்லி வணிகர்களுக்கு ஏற்கெனவே கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம் தெரிவித்தது.
ஒக்ரோபர் 10இல் நடந்த போராட்டங்களால் ரூ.2,000 கோடியும், ஒக்ரோபர் 13 முதல் 16 வரை சாலைகள் மூடப்பட்டது மற்றும் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டதால் ரூ.1,000 கோடியும் இழப்பு ஏற்பட்டதாக அதன் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறினார்.
இதில் சில்லறை வணிகத்துக்கு ரூ.1,800 கோடியும், மொத்த வியாபாரத்துக்கு ரூ.600 கோடியும் அடங்கும். இடையூறுகள் தொடர்ந்தால், நவம்பர் 8 தீபாவளிக்குள் இழப்பு ரூ.10,000 கோடியைத் தாண்டலாம் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
ராம்லீலா, புராரி, சிபிடி மைதானங்கள் போராட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லி வியாபாரிகள் மகாசங்கம், துணைநிலை ஆளுநர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
அதில், ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1இல் நடைபெற உள்ள இண்டியா கூட்டணி நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ராம்லீலா மைதானம், சதர் பஜார், சாந்தினி சவுக், காரி பாவ்லி, சாவ்ரி பஜார் போன்ற மொத்த வியாபாரச் சந்தைகளுக்கு அருகில் இருப்பதே பிரச்சினை என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். தீபாவளிக்கு முந்தைய வாரங்கள் விற்பனைக்கும் சரக்கு விநியோகத்துக்கும் மிக முக்கியமானவை.
சமீபத்திய போராட்டங்களால் மொத்த வியாபாரம் 30% பாதிக்கப்பட்டதாக மகாசங்கம் தெரிவித்தது. மேலும் கூட்டம் நடந்தால் சரக்கு விநியோகம் தாமதமாகும், ஆர்டர்கள் ரத்தாகும் என்றும் மருத்துவமனைகள், ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழிகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது.
