இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான நபரே இவ்வாறு திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.
சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சையத் சிராஜுதீன் என்பவர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றுவிட்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.
விமானத்தில் இருந்து இறங்கியவர் குடிவரவு மற்றும் சுங்கத்துறை சோதனைகளை முடித்துவிட்டு, பிராட்வே செல்வதற்காக விமான நிலைய வளாகத்தில் உள்ள மெட்ரோ தொடருந்து நிலையத்திற்கு சென்றார்.
அங்குள்ள ரிக்கெட் கவுண்டர் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட சக பயணிகளும், மெட்ரோ நிலைய ஊழியர்களும் உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து வந்த மருத்துவ குழுவினர் முதலுதவி வழங்கிய போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து விமான நிலைய பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரச மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.
