தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் 6 மாடி கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்ததில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர்.
தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் 6 மாடி கட்டடம் மாணவர் விடுதியாக செயல்பட்டு வந்தது. டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்துக்கு அருகில் இக்கட்டடம் அமைந்துள்ளதால் ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வந்தனர் எனக்ட கூறப்படுகிறது. இந்த கட்டடம் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு 12 தீயணைப்பு வாகனங்கள், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்.
அதிகாரபூர்வ மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்பாகவே, உள்ளூர் மக்கள் கைகளாலேயே இடிபாடுகளை அகற்றி இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கட்டடத்தின் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளப் பதிவில், “டெல்லி சத்ய நிகேதனில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த மனவேதனையளிக்கிறது. இதில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
