பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் 4 ஆவது அறிக்கை பச்சைப் பொய்!

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நான்காவது அறிக்கையில், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. இயற்கை அனர்த்தம் அல்லது தொற்றுநோய்களால் உயிரிழப்புகள் இடம்பெற்றிருக்கலாம் என்று குறிப்பிடுவதை முற்றாக நிராகரிக்கின்றோம். இந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானது. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் முதலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான ஆய்வாக மேற்கொள்ளப்பட்டாலும், தற்போது உண்மையை மறைப்பதற்கும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் போலியான அறிக்கைகள் ஊடாகச் சதி இடம்பெறுகின்றது. உண்மையை கண்டறிய வேண்டுமாயின் சர்வதேச நிபுணர்களைக் கொண்டு இந்த மனிதப் புதைகுழிகளை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட தமிழர்களின் உடல்கள் தொடர்பான நீதி விசாரணைகளை ஏதோவொரு விதத்தில் முடக்கும் செயற்பாடே தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளது. இதனாலேயே உள்நாட்டுப் பொறிமுறை அல்லது உள்நாட்டில் உள்ள நபர்களால் முன்னெடுக்கப்படும் ஆய்வுகள் திருப்திகரமான ஆய்வாக இருக்காது என்பதனை ஆரம்பத்தில் இருந்தே குறிப்பிட்டு வருகின்றோம்.

சர்வதேச விசாரணை, சர்வதேச நிபுணர்களைக் கொண்டு இந்த மனிதப் புதைகுழிகளை ஆய்வு செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு ஆராய்ச்சி தொடர்பான 2025/2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது உண்மையில் மாறுபட்டதாக உள்ளது.

உண்மைக்குப் புறம்பான சில விடயங்களை அந்த அறிக்கை வெளியிடுவதாக நாங்கள் பார்க்கின்றோம். ஆரம்பத்தில் இருந்த முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளை ஆராயும்போது, அந்த அறிக்கையில் உள்ள விடயங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நான்காவது அறிக்கையில் திரிபுபடுத்தப்பட்டதாக அமைந்துள்ளது.

இதில் விசேடமாக உள்ள விடயம் என்னவென்றால், ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மற்றும் அதில் உள்ள செயற்பாடுகள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு திட்டமிடப்பட்ட முறையில் இந்த ஆய்வாளரினால் மாற்றப்பட்டுள்ளது என்பதனையே குறிப்பிடுகின்றோம்.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின்படி, புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் இயற்கை அனர்த்தத்தினாலும் தொற்றுநோயாலும் இறந்திருக்கலாம் என்றே அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இதனை உண்மைக்குப் புறம்பான அறிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம்.

இந்த அறிக்கையைச் சமர்ப்பித்த ராஜ் சோமதேவா என்பவர் தொல்லியல் ஆய்வாளரே தவிர, அவர் மருத்துவ, தடயவியல் நிபுணரோ, மானுடவியல் தொடர்பானவரோ அல்லது உடற்கூற்றுப் பரிசோதனை பற்றிய அறிவைக் கொண்டவரோ அல்லர். அவர் தனது அறிக்கையில் தனது ஆராய்ச்சியை விடுத்து, தனக்கு விரும்பியவாறு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் இந்த விடயங்கள், குறிப்பாகச் சாதாரண தடையத்துக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும், இது குற்றம் தொடர்பான விடயமாக இருப்பதால் அதனைச் குற்றவியல் பிரதேசமாகக் கருதியே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் தனது நான்காவது அறிக்கையில் சாத்தியக்கூறு குறைவானதாகவே சுட்டிக்காட்ட விரும்புகின்றார்.

ஆரம்பத்தில் இதனைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான ஆய்வாக மேற்கொள்ளப்பட்டாலும், பின்னர் இதனை மறைப்பதற்காகச் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான சூழ்ச்சி வேலையாகவே பார்க்கின்றோம். செம்மணிப் புதைகுழி இந்து மயானமாகவே இருந்துள்ளது.

அங்கு புதைக்கப்பட்ட உடல்கள் வித்தியாசமான முறையில் புதைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த சோமரத்ன ராஜபக்ஷ இதனைத் தோண்ட வேண்டும் என்றும், இங்கு 600 இற்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியிருந்தார்.

அங்கு இதுவரை எடுக்கப்பட்ட உடல்களைப் பார்க்கும் போது 572 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இப்போது வந்துள்ள அறிக்கையைப் பார்க்கும் போது, 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் புதைக்கப்பட்டவை அல்ல, 50 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட உடல்களாக இருக்கலாம் என்று ராஜ் சோமதேவாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த வகையில் உண்மையாக இருக்க முடியும்?

எவ்வாறாயினும், அங்கு தோண்டப்படும்போது நாணயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த நாணயங்கள் 1995 மற்றும் 1996ஆம் ஆண்டு காலத்துக்குரியவையே. அதனை அந்த அறிக்கையில் அவர் குறிப்பிடவில்லை.

அதேபோன்று, அந்த உடல்கள் புதைக்கப்பட்ட விதம், ஆரம்பத்தில் புகைப்படங்களில் இருந்த விதம் மற்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மாறுபட்டவையாக இருக்கின்றன.

பல விடயங்களை மறைத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகவே இருக்கின்றது. அவர் ஆய்வாளரே தவிர மருத்துவ நிபுணரோ, மானுடவியல் விடயங்களைக் கையாளும் நிபுணரோ அல்லர். ஆனால் உடற்கூற்றுப் பரிசோதனையைச் செய்தது போன்றே அவர் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது?

ஏதோவொரு விதத்தில் அங்கு புதைகுழியில் புதைக்கப்பட்ட தமிழர்களின் உடல்கள் தொடர்பான நீதி விசாரணைகளை முடக்கும் செயற்பாடாகவே நாங்கள் இதைப் பார்க்கின்றோம். இதனாலேயே உள்நாட்டுப் பொறிமுறை அல்லது உள்நாட்டில் உள்ள நபர்களால் செய்யப்படும் ஆய்வுகள் திருப்திகரமான ஆய்வாக இருக்காது என்பதைக் கூறுகின்றோம்.

இதனாலேயே சர்வதேச விசாரணை, சர்வதேச நிபுணர்களைக் கொண்டு இந்தப் புதைகுழிகளைத் தோண்டி மனித எச்சங்களைப் பார்த்து ஆராயும்போது உண்மைகளைக் கொண்டுவர முடியும். இதனால் ராஜ் சோமதேவாவின் நான்காவது அறிக்கை முன்னுக்குப் பின் முரணானதாக இருக்கின்றது.

புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டியெடுக்கப்படும்போது சப்பாத்து அணிந்த சிறுவர்கள் இருந்துள்ளனர். வயோதிபர்கள், சிறிய குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்களும் இருந்துள்ளனர். அவர்களின் சப்பாத்துகள், செருப்புகள் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றின் புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அறிக்கையில் அவற்றைக் காணவில்லை. பாடசாலைப் பை, அவர்களின் ஆடைகளும் இருந்தன. ஆனால், அறிக்கையைப் பார்க்கும் போது இது 40 மற்றும் 50 வருடங்களுக்கு முற்பட்ட உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிடுகின்றார். இதனால் இது முன்னுக்குப் பின் முரணான கருத்தாக இருக்கின்றது. இதனை ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுகின்ற செயற்பாடாகவே பார்க்கின்றோம்.

இந்த விடயத்தை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும். விசேடமாக, உள்நாட்டிலுள்ள நிபுணத்துவம் உள்ளவர்கள் மாத்திரமன்றிச் சர்வதேசத்திலுள்ள நிபுணத்துவம் மிக்கவர்களையும் உள்வாங்கி ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டும். 65 வீதமான இடங்களிலேயே உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் 35 வீதமான இடங்கள் இருக்கின்றன. அவற்றில் 1200 இற்கும் மேற்பட்ட உடல்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மரணதண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷ என்பவர் 1995 மற்றும் 1996ஆம் காலப்பகுதியில் குறித்த பகுதியில் இராணுவச் சிப்பாயாக இருந்தவர் என்பதுடன், குறித்த சம்பவத்தை நேரடியாகக் கண்டவராவார். இவர் சாட்சியமளித்துள்ளார். இப்போது அவரை மீண்டும் குற்றப் புலனாய்வு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சிப்பாய் இருந்தபோது நடந்த படுகொலையை அடிப்படையாகக் கொண்டு 600 இற்கும் மேற்பட்ட உடல்கள் அந்தப் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால், வெளியிடப்பட்ட அறிக்கையில் இயற்கை அனர்த்தம் அல்லது தொற்றுநோயினால் புதைக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்ற ஊகம் எழும்புவதாகக் கூறப்பட்டுள்ளது. இது மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயற்பாடாகவே தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஆகவே, மிகுதியாக இருக்கும் 35 வீத இடங்களையும் பிரதேசங்களையும் ஆய்வு செய்ய வேண்டுமென்றால், அரசு சர்வதேச ஒத்துழைப்புடன் இதற்கான வேலைத்திட்டங்களைச் செய்ய வேண்டும். அரசுக்கு அந்தக் கடமையும் பொறுப்பும் உள்ளது.

பட்டலந்த படுகொலை தொடர்பான விடயங்களில் கடந்த கால அரச காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் அதேநேரத்தில், செம்மணி தொடர்பான மிகுதி விடயங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாக இருக்கலாம் அல்லது சந்திரிகா, பிரேமதாஸ கால அரசுகளாக இருக்கலாம். இவர்களாலேயே இந்தப் படுகொலைகள் செய்யப்பட்டன. இதனால் இந்த விடயங்களின் அடிப்படையில் இந்த அரசுக்குப் பொறுப்புகள் உள்ளன. தமிழினப் படுகொலையை மறைப்பதற்கான ஒரு விடயமாக இது இருக்கலாம் என்ற சந்தேகங்கள் உள்ளன.

தொல்லியல் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவா வழங்கியுள்ள அறிக்கை கேள்விக்குரிய அறிக்கையாகவே இருக்கின்றது. முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் மனிதப் புதைகுழி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நான்காவது அறிக்கையில் மனிதப் புதைகுழி என்ற விடயத்தைச் சுட்டிக்காட்டவில்லை.

ஆகவே, இந்த அறிக்கை திட்டமிடப்பட்ட செயலாகவும் சர்வதேசத்தை ஏமாற்றுகின்ற செயலாகவும் இருக்கும். எனவே, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் தகுந்த நீதியான விசாரணையை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.” – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles