Sangathy
Srilanka

சுதந்திரக் கட்சியை அழிக்க அரச ஆதரவுடன் சூழ்ச்சி : மைத்ரி குற்றச்சாட்டு..!

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிப் பதற்கு அரசாங்க தலையீட்டுடனான அரசியல் சூழ்ச்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்களிலிருந்து அரசாங் கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்களின் மத்தியில் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு பொருத்தமானவர் ஒருவர் கூட இல்லை. அவர்களின் கதைகளைக் கூறினால், அவர்கள் அரசியலிலிருந்து ஓட நேரிடும். அதன் காரணமாகவே கட்சியின் ஆதரவாளர்களுக்காகவும் அமைப்பாளர்களுக்காகவும் எனது பதவியை இராஜிநாமா செய்து அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு பதில் தலைமைத்துவத்தை வழங்கினேன்” என்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட ஆசன பொதுக்கூட்டம். கரந்தெனியவில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்றது. அதன்போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மக்களைப் பற்றியும் கட்சியின் தேசிய அமைப்பாளர்களையும் பற்றியும் சந்தித்தே கட்சியின் தலைமைத்துவத்தை துரந்தேன். அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை கட்சியின் தலைவராகவும் நியமித்தேன். எனது தலைமைத்துவ பதவிக்கு எதிராக திருட்டுதனமாக வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, என்னால் தலைமைத்துவப் பதவியை தொடர்ந்து வகிக்க முடியாது என்ற இடைக்கால தடையுத்தரவை பெற்றது மாத்திரமல்லாமல் வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை என்னால் கட்சியில் பணியாற்ற முடியாது என்று நீதிமன்றத்திடமிருந்து உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

முதலில் எந்த தேர்தல் இடம்பெறும் என்ற விடயம் நாட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பாராளுமன்றத் தேர்தலா, ஜனாதிபதித் தேர்தலா? என்பது மக்கள் மத்தியிலிருக்கும் பேசுபொருளாகும். இந்த தேர்தல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றில் உண்மையான தகவல்களும் இருக்கின்றன. பொய்யான தகவல்களும் இருக்கின்றன. அதனால், எந்த தேர்தல் முதலில் இடம்பெறும் என்று நம்பிக்கைத் தெரிவிக்க முடியாது.

எனக்கு எதிராக தடையுத்தரவுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கட்சியின் தலைமைத்துவ பதவியை வகித்திருந்தால் இங்கிருக்கும் கட்சியின் அமைப்பாளர்கள் யாரினாலும் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது. தேர்தல் ஆணைக்குழுவும் அதனை ஏற்றிருக்காது. அதன் காரணமாகவே நான் பதவியை இராஜினாமா செய்தேன்.

பதில் தலைவர் பதவிக்கு விஜேதாச ராஜபக்ஷவை நியமித்ததும் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தார்கள். 17 கோடி ரூபா பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொண்டதாகவும் எனது வழக்குகளுக்கு செலவு செய்ய பணம் இன்மையினால் கட்சியை விற்று விட்டதாகவும் விமர்சனங்களை முன்வைத்தார்கள். இருந்தபோதும், எங்களிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை வகிப்பவர்களின் மத்தியில் கட்சியில் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு பொறுத்தமானவர் ஒருவராவது இருக்கிறாரா? அவர்களின் கதைகளை கூறினால், அவர்கள் இங்கிருந்து ஓட நேரிடும். இன்றும் வெட்கமின்றி பதில் தலைவராகவும் செயற்படுகிறார்கள்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். நியமனம் வழங்கி சிறிது காலத்தில் அந்த அமைச்சின் கீழ் பணியாற்றும் பொறியியலாளர்களிடம் தனக்கு இவ்வளவு பணம் வேண்டும் என்று கோரியிருந்ததாகவும் அதன்போது பணியாற்றிய ஜப்பான் நாட்டு பொறியியலாளர்கள் அமைச்சர் தம்மிடம் இவ்வாறு பணம் கோருவதாக இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவரிடம் கூறியிருக்கிறார்கள்.

அதன் பின்னர், தாம் கொடுத்த நிதியில் உங்களின் அமைச்சரொருவர் பணம் கோருவதாக கடிதமொன்றை எழுதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க ஜப்பான் தூதுவர் நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர், அந்த அமைச்சுப் பதவியிலிருந்து நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு கோட்டா நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் காரணமாகவே கட்சியின் தலைமைத்துவத்தை இராஜிநாமா செய்து விட்டு, விஜேதாசவுக்கு பதில் தலைமைத்துவத்தை வழங்கினேன்.

இருந்தபோதும், அவரே தற்போது கட்சியின் பதில் தலைவராக செயற்படுகிறார். சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற பலகையை வைத்துக்கொண்டு, கையொப்பமிட்டு நியமனங்களையும் வழங்குகிறார். இவ்வாறானதொரு நபரொருவர் தலைமைத்துவ பதவியை பெற்றுக்கொண்டு எவ்வாறு வெட்கமின்றி நடமாடுகிறார்கள் என்பதும் புரியவில்லை. நபர் யார் என்பதை நன்கு தெரிந்தும், கட்சியில் உரிமையும் சட்டபூர்வத்தன்மையும் இல்லை. இடைக்கால தடையுத்தரவுகளுக்கு அப்பால் நீதிமன்ற தீர்ப்புகள் எதுவும் வெளிவரவும் இல்லை.

தாம் இதுவரையில் ஆட்சி செய்யாததால், முதல் முறையாக தமக்கு ஆட்சி பலத்தை வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னணியினர் கூறுகின்றனர். அவர்கள் எத்தனை அரசாங்கங்களின் பங்காளர்களாக இருந்தார்கள்? சந்திரிகாவின் அரசாங்கத்தில் பங்காளராக இருந்தார்கள். அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஒரு வருடம் 04 அமைச்சுப் பதவிகளை வகித்தார்கள். அவ்வாறு இருக்கையில், எவ்வாறு ஆட்சி செய்ததில்லை என்று கூறுகிறார்கள். 2010ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவுக்காக பணியாற்றினார்கள். இருந்தபோதும் 2015ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியானதும் என்னுடன் மக்கள் விடுதலை முன்னணி இணையவில்லை. தற்போதுள்ள ஜனாதிபதியுடனே அவர்கள் இணைந்தார்கள்.

எந்தக் குழு என்ன செய்தாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை.

சுதந்திரக் கட்சியை முழுமையாக அழிக்கும் அரசாங்கத் தலையீட்டுடனான அரசியல் சூழ்ச்சியே தற்போது இந்த நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதன் காரணமாக அதற்கு ஏமாற வேண்டாம். சுதந்திரக் கட்சியிலுள்ளவர்கள் யார் என்பதை தெளிவாக அறிந்துக்கொள்ளலாம். அதற்கு காரணம் சுதந்திரக் கட்சி முழுமையாக எதிர்த்தரப்பிலிருந்தே செயற்படுகிறது.

அந்தத் தரப்பிலுள்ளவர்கள் சுதந்திரக் கட்சியினர் என்ற பலகையை வைத்துக்கொண்டு, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இதுவே உண்மையாக சுதந்திரக் கட்சியை அடையாளம் காண்பவர்களுக்கான சிறந்த எடுத்துக் காட்டாகும்” என்றார்.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள சிறைச்சாலை அதிகாரிகள்..!

tharshi

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிரான மனு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Lincoln

மசாஜ் நிலையத்தில் சிக்கிய சிறுமிக்கு எச்.ஐ.வி..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy