Sangathy
News

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

 

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் -அனலைத்தீவு மற்றும் கோவளம் கடற்பரப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மீனவர்களின் 02 ட்ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழகம் – புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மீனவர்கள் 12 பேரும் படகுகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய ட்ரோலர் படகுகள் ஐந்தை அரசுடைமையாக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவை இடைநிறுத்தி வட மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்ரோலர் படகுகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட அரசுடைமையாக்கல் உத்தரவிற்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ட்ரோலர் படகுகளை அரசுடைமையாக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திற்கும் மயிலிட்டி மீன்பிடித்துறைமுக நிர்வாகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கவும் வட மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் 28 மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் 04 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமருக்கான கடிதத்தில் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான கைதுகளை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் உறுதியான காலவரையறைக்குட்பட்ட திட்டத்தை உடனடியாக வகுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

No funds for recruiting teachers of English in three provinces

Lincoln

இலங்கையர்கள் சிலர் ஜோர்தானில் பலவந்தமாக தொழில் புரிய நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக தகவல்

John David

Civil society activist arrested for power piracy

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy