கடல்சார் நட்புறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இந்திய மற்றும் ஜப்பான் அமைச்சர்கள் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்தியாவின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவாலும் ஜப்பானின் போக்குவரத்து, சுற்றுலாப் பயணத்துறை அமைச்சரும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதியமைச்சருமான டெராடா யோஷிமிச்சியும் இவ்வாறு சந்தித்து பேசியுள்ளதாக இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சு தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பில் அவ்வமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,
இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறிப்பாக ஜப்பானிய கப்பல் கட்டும் தளங்களின் முதலீடு, துறைமுகங்களை டிஜிட்டல் மயமாக்குதல், பசுமை துறைமுக முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை அதிகரித்தல், மனித வளங்களை மேம்படுத்துதல், ஜப்பானில் இந்திய மாலுமிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் ஸ்மார்ட் தீவுகளாக மாற்றுவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளன.
இச்சமயம் அமைச்சர் சர்பானந்த சோனோவால், தீவுப் பிரதேசங்களை மேம்படுத்துவதற்கு ஜப்பானின் நிபுணத்துவம் இந்தியாவுக்கு பெரிதும் பயன்மிக்கதாக அமையும். வலுவான இருதரப்பு உறவின் மூலம் இந்தியாவின் வளர்ந்து வரும் கடல்சார் கைத்தொழில் துறையில் ஜப்பானிய கப்பல் கட்டும் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு தனித்துவமானதொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
