ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினர், இஸ்ரேல் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேலிய படையினர், காசாவில் நடத்திய இரட்டை தாக்குதல்களுக்கு ஒரு நாள் கழிந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
நேற்று கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீது, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஐந்து செய்தியாளர்கள் உட்பட, குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதனைத் துயரமான விபத்து என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதனை உலகத் தலைமைகள், உதவி நிறுவனங்கள் மற்றும் ஊடக சுதந்திரக் குழுக்கள் கண்டித்துள்ளன.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதியன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் காசாவிற்கு பணயக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தநிலையில், ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 பணயக் கைதிகள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
இதேவேளை, ஹமாஸின் இந்தத் தாக்குதல்களை அடுத்து இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில், இதுவரை 62,819 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.
