ஜம்மு காஷ்மீர்: நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத கும்பல்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு திடீரென்று இந்த வெடிப்பொருட்கள் வெடித்து சிதறிய நிலையில் 9 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் தான் தனது மகள் சொல்ல சொல்ல கேட்காமல் போலீசார் கூப்பிட்டதால் சென்ற தந்தை ஒருவர் இறந்த சோகமான தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நவ்காம் என்ற போலீஸ் நிலையம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் உள்பட பல மாநிலங்களில் பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் இந்த போலீஸ் நிலையம் மிகவும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த ‛ஒயிட்காலர்’ பயங்கரவாதிகளான முஜாமில் உள்பட 4 டாக்டர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி உமரும் இந்த ம்பலை சேர்ந்த டாக்டர் தான். இந்த பயங்கரவாத கும்பலிடம் இருந்து அம்மோனியம் நைட்ரேட் உள்பட பல்வேறு வகையான வெடிப்பெருட்களை இந்த போலீஸ் நிலையத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். இந்த வெடிப்பொருட்கள் அனைத்தும் நவ்காம் போலீஸ் நிலையத்தின் தனிஅறையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் நேற்று நள்ளிரவில் திடீரென்று வெடிப்பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தீப்பிழம்பு பல அடி உயரம் வரை சென்றது. இதில் 9 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட வெடிப்பொருட்களை பிரித்து ஆய்வுக்காக சாம்பிள் எடுத்தபோது திடீரென்று விபத்து ஏற்பட்டுள்ளது. பலியான 9 பேரில் 57 வயது நிரம்பிய டெய்லர் முகமது ஷபியும் ஒருவர் ஆவார். இவர் டெய்லர் என்பதால் உதவிக்காக போலீசார் அழைத்து சென்றனர். வெடிப்பொருட்களை தனித்தனி பாக்கெட்டுகளில் அடைக்கும்போது அதனை தைய்க்க அவரை அழைத்து சென்றனர்.
இதுபற்றி முகமது ஷபியின் உறவின் முகமது ஷபி செய்க் கூறுகையி்ல, ‛‛வெடிப்பொருட்களை தரம்பிடித்து தனித்தனியாக வைக்க வேண்டும். சாக்கு பைகளை தைய்த்து கொடுக்க வேண்டும் என்று அவரை அழைத்து சென்றனர். நேற்று காலையிலேயே அழைத்து சென்றனர். இடையில் தொழுகைக்கு மட்டும் வந்தார். இப்போது அவர் இறந்துவிட்டார். நான் வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என்பது தான் அவரது கடைசி வார்த்தை. பிறகு இரவு 9 மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்தார். அப்போது அவரது மகள் அப்பா போகாதீங்க என்று கெஞ்சினாள். அதிகப்படியான குளிரை காரணம் காட்டி போகாதீங்க என்று கூறினாள். ஆனால் அவர் கேட்கவில்லை. போலீஸ் நிலையத்தில் வேலையை முடித்துவிட்டு வந்துவிடுவேன் என்று கூறி சென்றவர் இனி வரமுடியாத இடத்துக்கு சென்றுவிட்டார்” என்று கண்கலங்கினார். இறந்த முகமது ஷபிக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளன. முகமது ஷபியின் உழைப்பில் தான் குடும்பமே வாழ்ந்து வந்தது. தற்போது அவர் இறந்துவிட்டதால் குடும்பத்தினர் கண்ணிரீல் மூழ்கி உள்ளனர்.
