Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஅரசமைப்பு பேரவையிருந்து சிறீதரன் இராஜினாமா செய்யவேண்டும் - தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானம்

அரசமைப்பு பேரவையிருந்து சிறீதரன் இராஜினாமா செய்யவேண்டும் – தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானம்

அரசியலமைப்பு சபையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ராஜினாமா செய்யவேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சயின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேசிய ரீதியில் ஒரு குற்றச்சாட்டு ஒன்று எமது பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபையில் அரசுடன் இணைந்து அனைத்திற்கும் வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. விசேடமாக கணக்காளர் நாயகம் நியமனத்தில் ஒரு இராணுவ அதிகாரிக்கு சார்பாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டிற்கான அலுவலகத்திற்கும் இராணுவ அல்லது பாதுகாப்புத்தரப்பின் பின்புலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு சிறிதரன் சார்பாக வாக்களித்தமை மட்டுமல்லாமல் அவர்களை தெரிவுசெய்கின்ற நேர்முக பரீட்சையிலும் தேர்வுசெய்துள்ளார். என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தது. அதனை அவர் மறுத்திருந்தார். ஆனால் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அந்த இருவரையும் நியமிக்கக்கூடாது என்று கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு எழுதிவைத்திருந்தோம். எனவே அது ஒரு தர்மசங்கடமான நிலைமையை கட்சிக்கு ஏற்ப்படுத்தியுள்ளது. இவர்களை நியமிக்க கூடாது என்று கட்சி கடிதம் எழுதியுள்ளது. ஆனால் கட்சியை சேர்ந்தவர் அவர்களை தெரிவுசெய்துள்ளார்.

அத்துடன் அதற்கு முன்னரும் கூட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக மத்தியகுழு கூட்டத்தில் அவரிடம் விளக்கம் கேட்டிருந்தோம். கூடிய புள்ளி எண்ணிக்கையை பெற்றவருக்கு அந்த பதவியை வழங்காமல் இரண்டாவதாக வந்தவருக்கு அரசாங்கம் கொடுத்தபோது அரசுடன் இணைந்து அவர் வாக்களித்ததாக சொல்லப்பட்டது. அதற்கான நியாயப்பாடுகளை கட்சிக்கூட்டத்தில் அவர் சொல்லியிருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவி தொடர்பான வாக்கெடுப்பிலும் அப்படி செயற்ப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது.
கணக்காளர் நாயகம் விடயத்தில் மூன்று தடவைகள் அவ்வாறு நடந்துள்ளது. இறுதியாகவே அந்த இராணுவ அதிகாரியும், அதற்கு முன்பு ஜனாதிபதி தனது நெருங்கிய நண்பரையும் பின்னர் இரண்டாம் நிலையில் இருக்கும் ஒருவரையும் பரிந்துரை செய்திருந்தார். இருப்பினும் அந்த மூன்றும் நிறைவேறவில்லை.

ஏனெனில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருவரும் சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் சேர்ந்து அந்த பிரேரணைகளிற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.  அவர்களுக்கு சார்பாக சிறிதரனின் வாக்கு உட்பட நான்கு வாக்குகள் கிடைத்தது. எனவே அரசுடன் இணைந்து இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டது தொடர்பான குற்றச்சாட்டு அவருக்கு இருந்தது. ஏற்கனவே இது தொடர்பாக பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரச்சனையை எழுப்பியிருந்தார்.

சிறிதரன் பிரதிநிதித்துவப்படுத்துவது பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த மற்றய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி. எனவே அப்படியாக இருப்பவர் எல்லா விடயங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு அரசுக்கு சார்பாக வாக்களிப்பது தொடர்பான குற்றச்சாட்டு எட்டாவது தடவையாக நடந்துள்ளது. எனவே கட்சியையும் சங்கடப்படுத்தாமல் அவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் இருப்பதற்காக அரசியலமைப்பு சபையில் இருந்து அவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று பணிப்புரை வழங்குவதாக தீர்மானம் எடுத்துள்ளோம் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular