நேட்டோ கூட்டணி நாடு ஒன்றை இராணுவ ரீதியில் தாக்குவதற்கு அமெரிக்கா முடிவு செய்யுமானால் அதன் பிறகு அந்தக் கூட்டணி இருக்காது. எல்லாமே முடிவுக்கு வரும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 80 ஆண்டுகள் நீடித்த பாதுகாப்புப் பிணைப்பு இல்லாமற்போய்விடும்.
– டென்மார்க் பிரதமர் மெற்ற ஃபிரெடெரிக்ஸன் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.கிறீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே எழுந்துள்ள பதற்றத்தின் மத்தியில் டெனிஷ் பிரதமரது இந்தக் கருத்து வெளியாகியிருக்கிறது.
வெனிசுலா மீதான அமெரிக்காவின் திடீர்த் தாக்குதலக்குப் பின்னர் ட்ரம்பின் அடுத்த திட்டம் என்ன என்ற அச்சங்கள் கிறீன்லாந்தைச் சூழ்ந்துள்ளன.
ட்ரம்பின் மூத்த உதவியாளர் ஒருவரது மனைவி அமெரிக்கத் தேசியக் கொடியின் வர்ணங்களில் கிறீன்லாந்து வரைபடத்தை உருவாக்கி “விரைவில்” (Soon) எனத் தலைப்பிட்டு அதனைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். அது டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பலத்த உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது பற்றித் திரும்பத் திரும்பப் பேசி வருகிறார். அதனால் டென்மார்க் அரசுத் தலைமைக்குக் கடுப்பேறியுள்ளது.
பாதியளவு தன்னாட்சி அதிகாரம் பெற்ற – டென்மார்க்கின் ஆட்புல எல்லைக்குட்பட்ட – ஒரு நிலப்பகுதியாகிய கிறீன்லாந்துத் தீவை, அதன் மூலோபாய இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டிப் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் உயர்தொழில்நுட்பத் துறைகளுக்குத் தேவையான கனிய வளங்களுக்காகவும் அது அமெரிக்காவுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது ட்ரம்பின் நிலைப்பாடாக உள்ளது.
கிறீன்லாந்து தீவில் ஏற்கனவே அமெரிக்காவின் படைத் தளம் ஒன்று இருக்கிறது. ஆனால் தீவை முழுமையாகச் சொந்தமாக்க ட்ரம்ப் விரும்புகிறார்.
ட்ரம்ப் நேற்றுக் கடைசியாக செய்தியாளர்களிடம் பேசிய போதும்,”அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான நிலைப்பாட்டைப் பொறுத்தவரை கிறீன்லாந்து நமக்குத் தேவை “-என்றார்.
அமெரிக்க அதிபர் கடந்த சனியன்று எவருமே எதிர்பாராத விதமாக வெனிசுலா மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தார். இரவோடு இரவாக ஜனாதிபதி மடூரோவையும் அவரது மனைவியையும் அவர்களது வதிவிடத்திலிருந்து தூக்கிக் கைதுசெய்து நியூயோர்க்கிற்குக் கொண்டு வந்தார். இனி வெனிசுலாவை அமெரிக்காவே ஆட்சி செய்யும் என்று அறிவித்தார்.
ட்ரம்பின் இந்த அதிரடியைத் தொடர்ந்து, அவரது அடுத்த இலக்கு கிறீன்லாந்துதானா என்ற கேள்வி சர்வதேச மட்டங்களில் எழுந்துள்ளது.
ஆர்க்டிக்கில் உள்ள ஒரு பரந்த தீவாகிய கிரீன்லாந்தைத் தனது கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக அமெரிக்கா படை பலத்தைப் பரிசீலிக்கக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துவருகின்றது.
கிரீன்லாந்திற்கு ஒரு சிறப்புத் தூதரை நியமிக்க டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் எடுத்த நடவடிக்கை டென்மார்க்கில் கோபத்தைத் தூண்டியது.
57 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட கிரீன்லாந்து, 1979 முதல் பரந்துபட்ட சுயாட்சியைக் கொண்டுள்ளது, இருப்பினும் அதன் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை டெனிஷ் அரசின் கைகளிலேயே உள்ளது.
