ஈரானில் வெடித்துள்ள மக்கள் கிளர்ச்சிகளில் முன்னாள் முடிக்குரிய இளவரசர் ரெசா பஹ்லவி(Reza Pahlavi) நாடு திரும்ப வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிப்பதாகக் கூறப்படுகிறது. அவரே தற்போதைய கிளர்ச்சியில் ஈரானியர்களை வழிநடத்தும் விதமான அறிவித்தல்களை வெளியே இருந்துகொண்டு விடுத்து வருகிறார்.
மக்கள் ஆர்ப்பாட்டங்கள் தலைநகராகிய தெஹ்ரானுக்கு வெளியே ஏனைய பெரிய நகரங்களுக்கும் பரவி வருவதாக அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி (Supreme Leader Ayatollah Ali Khamenei) அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை “அமெரிக்க அதிபரை மகிழ்விக்க முயற்சிக்கும் குழப்பகாரர்கள்” என்று கூறி அவர்களை அடக்கி ஒடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடுகளும் தீவைப்புச் சம்பவங்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றன என்று பிபிசி செய்தி தெரிவிக்கிறது. குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகள் காயக்காரர்களால் நிரம்பியுள்ளன என்ற தகவலை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.
“ஈரானிய மக்கள் முன்னெப்போதும் இருந்திராத விதத்தில் சுதந்திரத்தை நோக்கி நகர்கின்றனர். அமெரிக்கா அவர்களுக்கு உதவத் தயார் நிலையில் உள்ளது” – என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது’ருத்’ சமூகவலைத் தளத்தில் எழுதியுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தினால் அவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா அங்கே இறங்கும் என்று அவர் முன்னர் எச்சரித்திருந்தார்.
இதேவேளை –
நகர மையங்களை ஆக்கிரமித்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள் என்று ரெசா பஹ்லவி ஈரானியர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதால் அங்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் பக்கச்சார்பற்ற செய்திகள் மூலம் உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
யார் இந்த ரெசா பஹ்லவி?
ஈரானின் கடைசி மன்னர் ஷாவின் (Mohammad Reza Shah Pahlavi) புதல்வரே ரெசா பஹ்லவி. 1979 புரட்சியின் போது மன்னர் ஷாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஒரு காலத்தில் மேற்கு நாடுகளால் ஆதரிக்கப்பட்ட அவர் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் தஞ்சமடைந்த நிலையில் புற்றுநோயால் மரணமானார். அவரது குடும்பம் நிர்க்கதியாகியது.
புரட்சி நடந்து தந்தையின் ஆட்சி கவிழ்ந்த சமயத்தில் ரெசா பஹ்லவி அமெரிக்காவில் போர் விமானம் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ஈரானின் மயில் சிம்மாசனத்தில் அமரவேண்டிய முடிக்குரிய இளவரசாகிய அவர் அதன் பின்னர் வோஷிங்டனிலேயே தலைமறைவு வாழ்க்கை நடத்த நேர்ந்தது. இப்போது பல தசாப்தங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் ஈரானிய மக்களது அரசியல் மையத்தில் தோன்றுகிறார்.
புரட்சி உள்ளே இருந்து வெடிக்க வேண்டும் என்று கூறிவந்த அவர் தற்போதைய மக்கள் போராட்டங்களை வெளியே இருந்து நெறிப்படுத்துகிறார். கிளர்ச்சியாளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இருக்கின்ற போதிலும் ஈரானியர்கள் மீண்டும் ஒரு மன்னர் ஆட்சியை ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்வியே. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
