புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கு ஒத்துவரக் கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்க தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுபட்டு முன்வரவேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதில் 2026 ஆம் ஆண்டுக்கான வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது. வருகின்ற மாதம் கட்சியின் மாநாட்டை கூட்டுவதற்கும் தீர்மானித்துள்ளோம்.
அத்துடன், காலத்தை பின்னடித்துச் செல்லாமல் மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தவேண்டும் என்பது எங்களது ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது. தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய தமிழ்க் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தலை வைக்கவேண்டும் என வலியயுறுத்தியுள்ளனர். ஆகவே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை பின்னடிக்காமல் உடனடியாக நடத்தவேண்டும். எம்மைப் பொறுத்தவரை பழைய முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும். அது தமிழ் மக்களது தேவையாகவும் கோரிக்கையாகவும் உள்ளது. இது தொடர்பாக மலையக-தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பும் சிஙகள கட்சிகள் என்பனவும் வலியுறுத்தி வருகின்றன.
அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை கொண்டு வருமாக இருந்தால் அந்த புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்னைக்கு தீர்வாக என்ன விடயங்களை உள்ளடக்கப் போகின்றார்கள் என்பதை தமிழர் தரப்புடன் அவர்கள் பேச வேண்டும். தமிழர் தரப்பு அதற்கான ஒரு பொது முடிவுக்கு வரவேண்டும். ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்றன ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். தீர்வு பொதுவிடயம், தமிழ் மக்களது நலன் சார்ந்த விடயம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒத்துவரக் கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தை முன் வைக்கவேண்டும். பல தீர்வுத் திட்டங்கள் ஏற்கனவே இருந்தாலும்கூட நாங்கள் ஒருமுகப்படுத்தி சரியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்ற தேவை உள்ளது. எல்லோரும் இணைந்து அதனை முன்வைக்க வேண்டும்.
மேலும், பயங்கரவாத தடைச்சட்டம் முற்று முழதாக நீக்கப்பட வேண்டும். தற்போது புதிய வடிவத்தில் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் வருகின்றது. இலங்கையில் உள்ள புத்திஜீவிகள் எல்லோரும் அதனை நிராகரித்துள்ளார்கள். சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்புக்கள் கூட அதனை நிராகரித்துள்ளது. இலங்கையின சட்டத்தில் இருந்து பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். சாதாரண குற்றங்களுக்கு இருக்கின்ற சட்டங்கள் இருக்கின்றது. அதனை பயன்படுத்த முடியும்-என்றார்.
