தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான குமார் என்று அழைக்கப்பட்ட தம்பித்துரை முத்துக்குமாரசாமி இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் காலமானார்.
யாழ்ப்பாணம் – திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட இவர், 1970களில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆயுதவழிக்கு மாற்றியமைத்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். தமிழீழ மாணவர் பேரவையை சேர்ந்தவரான இவர், அரச ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியமைக்காக சுமார் 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) என்ற அமைப்பை நிறுவிய இவர், அதன் தலைவராகவும் செயல்பட்டிருந்தார். போராட்ட அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டபோதிலும் கல்வியைத் தொடர்ந்தார். சட்டத்துறையில் மேற்படிப்பை தொடர்ந்த அவர் 1980களின் ஆரம்பத்தில் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார்.
அங்கு சர்வதேச மன்னிப்பு சபையின் பிரசார இயக்குநராக 22 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றியிருந்தார். புலம்பெயர்ந்து வாழ்ந்தபோதிலும் போராட்ட அமைப்புகள் பலவற்றுக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் செயல்பட்டார். அத்துடன், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்காக பல்வேறு வழிகளிலும் தொடர்ந்தும் இயங்கி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
