Monday, February 2, 2026
HomeMain Newsகிவுல் ஓயா திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - சுரேஷ் வலியுறுத்து

கிவுல் ஓயா திட்டத்தை அரசு கைவிட வேண்டும் – சுரேஷ் வலியுறுத்து

மகாவலி ‘எல்’ வலயத்தை உள்ளடக்கி, புதிதாக நிர்மாணிக்கப்படும் கிவுல் ஓயா திட்டம், ஏற்கனவே இருந்த அரசாங்கங்களைப் போல், தமிழ் மக்களின் காணிகளைப் பறித்து, அரசாங்க அனுசரணையுடன் தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்துவதையும், வடக்கு-கிழக்கு நிலத் தொடர்பை நிரந்தரமாகப் பிரிக்கும் உள்நோக்கத்தையும், நாட்டின் பூர்வீக குடிகளான தமிழர்கள், தமது சொந்த பிரதேசத்திலேயே இரண்டாம் தரக் குடி மக்களாக மாற்றப்படுவதையும் நோக்காக கொண்டுள்ளது எனவும், அதனால், இத்திட்டம் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் எனவும், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில்-

வவுனியா வடக்கு பிரதேசத்தையும் முல்லைத்தீவு மணலாறு பிரதேசத்தையும் உள்ளடக்கக் கூடிய வகையில் 23 ஆயிரத்து 456 மில்லியன் ரூபாய் செலவில் கிவுல் ஓயா என்ற ஒரு நீர்ப்பாசனத் திட்டத்திற்கான அணைக்கட்டு ஒன்றைக் கட்டுவதற்கு, அனுரகுமார அரசானது, 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாயை முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத் திட்டமானது, எதிர்வரும் 2031ஆம் ஆண்டு முடிவுறுத்தப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவ்வாறு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்லாயிரம் மில்லியன் ரூபாய்களுக்குக் கடனாளியாகி நாட்டை வங்குரோத்தில் வைத்திருக்கும் நீங்கள், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுகின்ற நோக்கில், மேலும் 23 ஆயிரத்து 456 மில்லியன் ரூபாயை செலவு செய்யமுற்படுகிறீர்கள் என்றால், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் நாட்டில் அபிவிருத்தியையும் எவ்வாறு கொண்டுவருவீர்கள்?.

உண்மையில் ஜனாதிபதி, நாட்டின் ஒருமைப்பாட்டையும் மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த விரும்பினால், இத்திட்டத்தை முற்றுமுழுதாகக் கைவிடவேண்டும்-என்று குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular