மத்திய கிழக்கில் போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றவேண்டும்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தில் மத்திய கிழக்கின் போர்ச் சூழல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

“எந்தவொரு போர் மோதலும் எந்தவொரு மக்கள் குழுவிற்கும் சாதகமான நிலையை உருவாக்காது. தொழில்நுட்ப ரீதியாகவும், போர் ரீதியாகவும் பாரிய ஆயுதத் தொழில்நுட்பக் கருவிகள் உருவாக்கப்பட்டு வரும் உலகில் இது எவ்வளவு அழிவுகரமானது என்பது குறித்து நாம் அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.

எனவே, இலங்கையின் நிலைப்பாடு என்னவென்றால், இந்தப் போருடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்புகளையும் வழிகாட்டல்களையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என்பதாகும்.” என்றார்.

இந்த போர்ச் சூழலினால் இலங்கையின் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாரிய தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும், தனிமைப்பட்ட ரீதியில் அதிலிருந்து எம்மால் மீள முடியாது எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

ஒரு நாடாக இதனை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் எனவும், அமைதியான உலகிற்காக சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் அர்ப்பணிப்பின் ஊடாக மாத்திரமே அதனைச் செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்குத் தடைகள் ஏற்படக்கூடும் எனவும், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பெரும் சிக்கல் உருவாகும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, சுற்றுலாத் துறை, வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளுக்கும் இதன் மூலம் பாதிப்புகள் ஏற்படும் எனவும் கூறினார்.

குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் இந்தப் போர்ச் சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த கால கசப்பான அனுபவங்கள் காரணமாக இவ்வாறானதொரு சூழலில் மக்கள் அச்சமடைவது இயல்பான நிலை எனவும் குறிப்பிட்டார்.

வெறும் சொற்களாலும் தரவுகளாலும் மாத்திரம் சமூகத்தை ஸ்திரப்படுத்த முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நடைமுறையில் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்துவதன் மூலமே அதனைப் புரியவைக்க முடியும் என்றும் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இவ்வாறான பல சவால்களை மிக வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமையால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் முன்னரை விட வேறுபட்டவை எனவும் தெரிவித்த ஜனாதிபதி, தற்போதைய போர்ச் சூழலை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நிச்சயமற்ற நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் என்ற ரீதியில் தொடர்ச்சியாக இந்நிலைமையை அவதானித்து வருவதாகவும், மத்திய வங்கி தற்போதைய நிலைமை குறித்து மீளாய்வு செய்து, நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அறிக்கையை இன்று அல்லது நாளை மாலைக்குள் வழங்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொதுமக்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து நிதி அமைச்சும் அறிக்கையொன்றைத் தயாரித்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் உள்நாட்டிலுள்ள மக்களுக்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவது குறித்த வேலைத்திட்டமும் தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

“ஒட்டுமொத்த நெருக்கடிக்கான தீர்வும் தனிநபர்களின் கைகளில் இல்லை… ஒட்டுமொத்த நெருக்கடிக்கான தீர்வுப் பாதையைக் கண்டறிவதில் அரசாங்கத்திற்கே பிரதான பொறுப்பு உள்ளது. அதேநேரம், பாராளுமன்றத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாத பொறுப்பு உள்ளது. பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க பொறுப்பு உள்ளது. அரசாங்கம், பாராளுமன்றத்திலுள்ள நாம் அனைவரும் மற்றும் மக்கள் என யாவரும் ஒரு பொதுவான இலக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் இதனை எதிர்கொள்ள வேண்டும் என்பதே எமது முன்மொழிவாகும்.” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles