யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று கைவிடப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை அவர்களிடம் வழங்குவதற்காக அமைச்சரவையால் இன்றைய தினம் அளவீடு செய்வதற்காக காணி உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் இறுதியில் காணி அளவீடு செய்யப்படவில்லை.
காணி அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களம் ஊடாக நீதி அமைச்சர், புத்தசாசன அமைச்சர், மற்றும் கடல் தொழில் அமைச்சர் அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் கடந்த சில தினங்களில் தீர்மானித்திருந்தனர். இன்றைய தினம் உரிமையாளர்களும் வரவழைக்கப்பட்டனர்.
ஆனால் அங்கு வந்த யாழ் மாவட்ட நில அளவைத் திணைக்களத்தினர் மற்றும் அரசாங்க அதிபர் மா.பிரதிபன் உள்ளிட்டோர் இன்னும் இரண்டு வாரங்கள் தவணை தேவைப்படும் என்றும் அதன் பின்னரே அழைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்து அரசாங்க அதிபருடன் முரண்பட்டனர். இதற்கு தையிட்டி விகாரையின் விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் காணி அளப்பதை தடுத்து நிறுத்தக் கோரி முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.
இதனாலேயே காணியை அளவீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது என்றும் அரசாங்கத்தின் அதிகாரத்தை மீறும் வகையில் சில தனியார்கள் செயற்பட்டு வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்றைய தினம் காலை பலாலி பொலிஸார் விகாரை அமைந்துள்ள பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியானது உயர் பாதுகாப்பு வணிகத்தில் காணப்பட்ட வேளை 2010ஆம் ஆண்டில் இருந்து மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்த நிலையில் 2021ஆம் ஆண்டு குறித்த விகாரை கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
