முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கணக்காளர் மற்றும் மேலாண்மை உதவியாளர் ஆகிய இருவரும் 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் வழங்கிய புகாரின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முறைப்பாட்டக்காரர் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் படுக்கை விரிப்புகளை சலவை செய்யும் ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது மார்ச் மாத கொடுப்பனவுக்கான காசோலையை விடுவிப்பதற்காக இந்த இலஞ்சப் பணம் கோரப்பட்டுள்ளது.
காசோலையை விடுவிக்க 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றபோது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.
