‘தமிழ்த் தலைவர்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியம்’ என்று இந்திய துணை ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், அந்தக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் கரங்களைப் பற்றியவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி நேற்று – ஏப்ரல் 19ஆம் திகதி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடந்த இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு உட்பட பல விடயங்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சந்திப்பின் நிறைவில் துணை ஜனாதிபதியுடன் சந்தித்த தலைவர்கள் அனைவரும் ஒளிப்படம் எடுக்கத் தயாராகினர். அந்தச் சமயத்தில் – சிவஞானம், சிறீதரன் ஆகியோர் ஜனாதிபதியின் அருகே சென்றனர். இருவரின் கரங்களையும் சமநேரத்தில் பற்றிய துணை ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் ‘தமிழர்களுக்காக அதிகமான அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. எனினும் தமிழ்த் தலைவர்களிடையே ஒற்றுமையானது மிகவும் அவசியமானது. நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்’, என்று வலியுறுத்தினார்.
அந்தச் சமயத்தில் சிறீதரனும் சீ. வீ. கேயும் புன்னகைத்தவாறு ஆமோதிப்பது போன்று தலையசைத்து நன்றி தெரிவித்தனர் என்று கூறப்படுகிறது.
