சுமார் 110 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்டனர் என்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கைதான பிக்குகள் தாய்லாந்திலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் மூலமாக நேற்று – ஏப்ரல் 25ஆம் திகதி இரவு நாட்டை வந்தடைந்தனர். பிக்குகளின் பயணப் பைகளை சோதனையிட்டபோது கற்றல் உபகரணங்கள், இனிப்புப் பொருட்களுக்கு நடுவே சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
குஷ், ஹசிஸ் ரக போதைப் பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டன. ஒவ்வொரு பிக்குவிடமிருந்தும் 5 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கைதான பிக்குகள் அனைவரும் இலங்கையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் உயர் கல்வி நிறுவனங்களில் பயில்கின்றனர் எனவும் கூறப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 110 கோடி ரூபாயாகும். இந்தளவு பெருந்தொகை போதைப்பொருள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சிக்கிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
