ஊழல்வாதிகள், மோசடியாளர்கள் மற்றும் திருடர்கள் அதிகளவில் சிறை செல்லும் வருடமாக இது அமையும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கா தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி அமையும் என்றும் அவர் கூறினார்.
நுவரெலியாவில் இன்று – மே முதலாம் திகதி நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகின்றனர். இலங்கையில் முதன் முறையாக உழைக்கும் மக்களின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நாம் இரண்டு வகையான தீர்மானங்களை எடுத்துள்ளோம். ஒன்று மக்களுக்கானது மற்றொன்று ஆட்சியாளர்களின் சிறப்புரிமைகளை நீக்குவது. நாட்டில் முதன்முறையாக உழைக்கும் மக்களின் நோக்கத்தை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கமாக உருவாகியுள்ளது.
டித்வா புயலால் பெருந்தோட்டத்துறை சார்ந்த விவசாய நிலங்கள், விவசாய நிலங்கள் என்பன சேதமாகின. மக்களுக்கான அரசாங்கம் என்ற வகையில் அதிகளவான நிவாரணங்களை வழங்கினோம்.
இதேபோன்று உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம் என்பதாலேயே தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அதிகரித்தோம். உழைக்கும் மக்களுக்கான அரசாங்கத்தை ஸ்தாபித்தால் இப்படியான நன்மை கிடைக்கும்.
குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் உருவாக்கினார்கள். எனவே, நாட்டு மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் எமது செயற்பாடுகள் அமையும்.
ஊழல்வாதிகள், மோசடியாளர்கள் மற்றும் திருடர்கள் அதிகளவில் சிறை செல்லும் வருடமாக இது அமையும். இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் தமது சிறப்புரிமைகளை அதிகரித்துக் கொள்வதற்கான தீர்மானங்களையே எடுத்திருந்தார்கள். ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்கு மாறுபட்ட வகையில் மக்கள் நலன் சிந்தித்தே பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளது. எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம் – என்றும் ஜனாதிபதி கூறினார்.
